ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை உருவாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032 ஆக இருந்த நிலையில், தற்போது 4 மடங்கு அதிகரித்து 8,416ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், மகளிர் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 966ஆக இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து 3,163ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் TANSEED திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் ஆதார நிதி வழங்கப்படுகிறது என்றும் இத்திட்டத்தின் கீழ் 132 நிறுவனங்களுக்கு 13 கோடியே 95 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு 2022- 23ஆம் நிதியாண்டில் 30 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டதாகவும், 2023-24ஆம் நிதியாண்டில் அது 50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 38 நிறுவனங்களுக்கு 55 கோடியே 20 லட்சம் ரூபாய் பங்கு முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் நேரடி முதலீடு பெற்ற புத்தொழில் நிறுவனங்களின் வாயிலாக 1,913 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள் தேவைப்படும் புத்தொழில் நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட TANFUND இணைப்புதளம் மூலம் 714 நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டி மென்பொருள், பயிற்சி வகுப்புகள், ஸ்டார்ட் அப் திருவிழா, வட்டார புத்தொழில் மையங்கள், ஸ்டார்ட் அப் டி.என்.ஸ்மார்ட் கார்டு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாகவும், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக புத்தொழில் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.