சென்னை ஐஐடியில் இன்று பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “நமது அரசியலமைப்பில் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கின்ற ராம ராஜ்ய கருத்துக்களை நம் மக்கள் முழுவதும் தெரிந்துகொள்ளவில்லை” என்று பேசியுள்ளார்.
சென்னை ஐஐடி-யில் உள்ள வனவாணி மேல்நிலை பள்ளியில் தனியார் அமைப்பின் சார்பில் இந்திய கலைகள் குறித்த 3 நாள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கிவைத்தார். இந்நிகழ்சியில் ஐ ஐ டி இயக்குநர் காமகோடி, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “நமது அரசியலைமைப்பு ஆன்மீகம், கலாச்சாரம், கலை ஆகிய கருத்துக்களால் நிரம்பியது. இதனை எண்ணி பெருமை கொள்ள வேண்டும். நமது அரசியலமைப்பில் உள்ள மதசார்பின்மை என்பதற்கான ஆங்கில வார்த்தை, ஐரோப்பிய அர்த்தம் கொண்டது. அந்த வார்த்தை தேவலாயங்களுடையேயான மோதலால் உருவானது. ஆனால் இன்றுவரை ஐரோப்பிய அர்த்தத்தை நாம் பின்பற்றுகிறோம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் பயணித்தால் இந்தியா முழுக்க பூஜைகளாலும், மாந்திரிகங்களாலும் நிரம்பியிருக்கின்றது என்பதை அறியலாம். இதுவே மேற்கத்திய நாடுகளை பார்த்தால், அவை அடக்குமுறைகளாலும், வன்முறைகளாலும் அழுத்தத்தாலும் உருவானவை. மாறாக நமது பாரதம் பக்தியால் உருவானது. காலணியதிக்கத்தின் போது நமது ஆன்மீகம், கலாச்சாரம் ஆகியவை சிதைக்கபட்டன.
நமது அரசியலமைப்பில் மக்களுக்கான அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கின்ற ராம ராஜ்ய கருத்துக்களை நம் மக்கள் முழுவதும் தெரிந்துகொள்ளவில்லை. நமது மாணவர்களுக்கு தவறுதலாக ஆன்மீகமற்ற பொருள் கொண்ட அரசியலமைப்பு கற்பிக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது” என்று பேசினார்.