இலங்கை அரசால் இந்திய மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் மீனவர்கள் முகநூல்
இந்தியா

இலங்கை: துப்பாக்கிச் சூடு மூலம் விரட்டி அடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!

கச்சத்திவு அருகே இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடந்தி உள்ளது. இதில் தப்பித்து பிழைத்து ராமேஸ்வர மீனவர்கள் கரை திரும்பினர்.

PT WEB

செய்தியாளர்:அ.ஆனந்தன்

ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் அடித்து சித்திரவதை செய்த நிலையில், இன்று வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (25.09.2024) காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள், சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் கடலுக்குச் சென்றனர். 

படகுகள்

இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கு தென்புறம் இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றிவளைத்து  மீனவர்கள் மீது இரும்பு கம்பி, பிலாஸ்டிக் ஓஸ் மற்றும் கயிறால் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அப்பகுதிக்கு  வந்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் மீனவர்கள் அச்சமடைந்து மீன்பிடி வலைகளை நடுக்கடலில் வைத்துவிட்டு கரை திரும்பியதாகவும் அச்சத்துடன் தெரிவித்தனர்.

இலங்கை அதிபராக அநுர குமார திஸநாயக பதவியேற்ற பின் முதன்முறையாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேதனையின் உச்சத்தில் மீனவர்கள்!

  • இலங்கை கடற்படையினரின் இந்த அச்சுறுத்தலால் இன்று படகு ஒன்றுக்கு சராசரியாக ரூ. 50,000 முதல் 1 லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்ததாக வேதனை தெரிவித்துள்ளனர் மீனவர்கள்.

  • மேலும், இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதும், அபதாரம் விதிப்பதும் மனித உரிமை மீறலாக மொட்டை அடிப்பதும் தொடர்ச்சியான நிகழ்வாக உள்ளது.

  • இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் வேறு தொழில் செய்து பிழைக்கலாம் என அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சென்று விட்டனர். மிச்சம் இருக்கும் மீனவர்களும் மீன்பிடித்தொழில் எவ்வாறு செய்வது என்ற அச்சத்தில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

இப்பிரச்னைக்கு மத்திய - மாநில அரசு உடனடியாக புதிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு நிரந்தர தீர்வை  ஏற்படுத்தவில்லை என்றால், மீன்பிடித் தொழில் நலிவடைந்து மீனவர்களும் மாற்றுத்தொழிலை நோக்கி செல்லும் அபாய நிலை ஏற்படும்” என மீனவ அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.