இந்தியா

கொரோனா தடுப்புக்கு கூடுதலாக ரூ1000 கோடி தேவை: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை

rajakannan

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே மாலை 6 மணிக்கு காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே, கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். காணொலிக்காட்சி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து பங்கேற்றார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், கொரோனா தடுப்புப் பணிகளுக்கான பேரிடர் நிதியை விரைந்து ஒதுக்குமாறு வலியுத்திக் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ1000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பருப்பு, மசாலா பொருட்கள் போன்றவை மாநிலங்களுக்கு இடையே லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் வேளாண், தோட்டக்கலைத்துறைக்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அப்போது முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.