இந்தியா

பாபர் மசூதி போல தாஜ்மஹாலும் இடிக்கப்படும்?... சமாஜ்வாதி தலைவர் அச்சம்

பாபர் மசூதி போல தாஜ்மஹாலும் இடிக்கப்படும்?... சமாஜ்வாதி தலைவர் அச்சம்

webteam

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போல தாஜ்மஹாலும் இடிக்கப்படும் என அஞ்சுவதாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததாக மக்கள் நம்பியதால் மசூதி இடிக்கப்பட்டது என்றால் இந்தியாவில் எந்த வழிப்பாட்டுத் தலமும் பாதுகாப்பானதாக இருக்காது என அவர் கூறினார். பாபர் மசூதி சர்ச்சை இருந்தபோது உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தடைகள் இருந்தபோதும் மசூதி இடிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், இதே நிலை தாஜ்மஹாலுக்கும் ஏற்படும் என அச்சம் தெரிவித்தார்.

நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாஜ்மஹாலை, உத்தரப் பிரதேச அரசு சுற்றுலா பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம், தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் அவருடைய தந்தையையே சிறை வைத்தவர் என்றும், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின் மீது படிந்துள்ள கறை என்றும் தெரிவித்தார். அதேபோல், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும், இஸ்லாமியர்களை நமது வரலாற்றில் இருந்தே அகற்ற வேண்டும் எனவும் கூறினார். இதுவும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார். வரும் 26 ஆம் தேதி தாஜ்மஹாலை பார்வையிடவும் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

இதனிடையே தேஜோ மஹால் என்ற சிவன் கோவில்தான் தாஜ்மஹால் என்ற மசூதியாக மாற்றப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் வினய் கத்தியார் கூறியிருக்கிறார். தாஜ்மஹால் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது என தெரிவித்த கத்தியார், தாஜ்மஹாலின் உட்புறத்தில் உள்ள அறைகளும், சிற்ப வேலைபாடுகளும் இதை நிருபிப்பதாக கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய கத்தியார், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.

இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைப் போல தாஜ்மஹாலும் இடிக்கப்படும் என அஞ்சுவதாக சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.