இந்தியா

'26/11 மும்பை தாக்குதலில் எனது மகன்கள், மனைவியை இழந்தேன்' -தாஜ் ஹோட்டல் மேலாளர் உருக்கம்

'26/11 மும்பை தாக்குதலில் எனது மகன்கள், மனைவியை இழந்தேன்' -தாஜ் ஹோட்டல் மேலாளர் உருக்கம்

JustinDurai

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் தாஜ் ஹோட்டல் பொதுமேலாளர் கரம்பிர் காங்கின் இரு மகன்கள் மற்றும் மனைவி கொல்லப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபை நேற்று நியூயார்க்கில் வைத்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது. இக்கூட்டத்தில் கடந்த 2008இல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது தாஜ் ஹோட்டலின் பொது மேலாளராக இருந்த கரம்பிர் காங்கிங்கும் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''26/11 மும்பை தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனது நாடு, எனது நகரம், எனது ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் பொது மேலாளராக இருந்த மும்பையில் உள்ள தாஜ்மஹால் ஹோட்டலில் 10 பயங்கரவாதிகள் தாக்கியதை ஒட்டுமொத்த உலகமே திகிலுடன் பார்த்தது. இதில் எனது இரண்டு இளம் மகன்கள் மற்றும் மனைவி உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நான் அனைத்தையும் இழந்தேன். நாங்கள் பல துணிச்சலான சக ஊழியர்களை இழந்தோம். இந்த வீரச் செயல் அன்றிரவு ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு நிதி கொடுத்தவர்கள் மற்றும் தாக்குதலை ஏற்பாடு செய்தவர்கள் சுதந்திரமாக உள்ளனர். முற்றிலுமாக அழிக்கப்பட்ட தாஜ் ஹோட்டலை 21 நாட்களில்  திறந்தோம். பயங்கரவாதத்திற்கு எதிரான நீதியைப் பெற தேசிய அளவிலும், எல்லை தாண்டியும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இன்று நான் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் கூறினார்.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிக்க: ராகுல் காந்தி டீசர்ட் குறித்து விமர்சித்த பாஜக... பதிலடி கொடுத்த காங்கிரஸ்