இந்தியா

அரசு மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்!

அரசு மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்று திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்!

webteam

சைக்கிளை எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

காக்கி பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை நிற தொப்பி என சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தெலங்கானாவின் நிசாம்பாத் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். காலை எட்டு மணிக்கே அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த அவர் அங்கிருந்த நோயாளிகள், உடன் வந்த பொதுமக்கள் பலரிடம் நேரில் சென்று பேசிக்கொண்டு இருந்தார். மருத்துவமனையில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஆய்வு செய்தார். யார் இவர்? ஏன் இந்த வேலையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார் என மருத்துவமனை ஊழியர்கள் விசாரிக்க, அவர் தான் நிசாம்பாத் மாவட்ட ஆட்சியர் என்று தெரியவந்துள்ளது.

டிசம்பர் 24ம் தேதி புதிய ஆட்சியராக பதவியேற்ற நாராயண ரெட்டி அரசு மருத்துவமனைக்கு திடீரென வருகை தந்து குறை நிறைகளை கவனித்துள்ளார். பணி நேரத்தின்போது மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் குறித்தும் தகவல்களை சேகரித்த ஆட்சியர், விளக்கம் கேட்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள மாவட்ட ஆட்சியர், நிசாம்பாத் அரசு மருத்துவமனை இந்தியாவில் 17வது சிறந்த மருத்துவமனையாக உள்ளது. இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மருத்துவமனையை மேலும் சிறப்பாக மாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் சாதாரணமாக பயணம் செய்து மக்களோடு மக்களோடு பேசி குறை நிறைகளை கேட்டறிந்த நாராயண ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.