உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் சுவிக்கி நிறுவனம் மதுபானங்களை ஜார்க்கண்ட் மாநிலத்தில் டெலிவரி செய்ய முன்வந்துள்ளது.
இந்தியாவில்ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் பெற்று, அதனை வீட்டிற்குச் சென்று டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது சுவிக்கி. இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் இந்நிறுவனம் தங்கள் கிளைகளை வைத்திருக்கிறது. இதுவரை உணவுப் பொருட்களை மட்டுமே டெலிவரி செய்து வந்த இந்நிறுவனம் தற்போது மதுபானங்களை டெலிவரி செய்ய முன்வந்துள்ளது.
கொரோனா பொது முடக்கத்தால் ஆன்லைன் மூலம் மதுவிற்கும் திட்டத்தினை செயல்படுத்த பல்வேறு மாநிலங்கள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநில அரசு சுவிக்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ராஞ்சி நகரத்தில் இன்று முதல் தங்கள் மதுபான ஹோம் டெலிவரியை சுவிக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதற்காக தங்கள் செயலில் மதுபான ஆர்டர் என்ற புதிய வசதியை அந்நிறுவனம் கொண்டுவந்துள்ளது. விரைவில் இந்தத்திட்டத்தை அனைத்து நகரங்களிலும் தொடங்க முடிவு செய்துள்ளதாக சுவிக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.