swiggy ட்விட்டர்
இந்தியா

ஐஸ்கிரீம் டெலிவரி செய்யாத ஸ்விக்கி.. வழக்கு தொடர்ந்த பெண்.. ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Prakash J

ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் சேவையைச் செய்து வரும் நிறுவனங்களில் ஸ்விக்கியும் (swiggy) ஒன்று. இந்நிறுவனம் எண்ணற்ற கிளைகளைக் கொண்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெண் ஒருவர் ஆர்டர் செய்திருந்த ஐஸ்கிரீமை டெலிவரி செய்யாத ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.5,000 தரவேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி (swiggy) ஆப் மூலம், 'நட்டி டெத் பை சாக்லேட்’ என்ற வகையான ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவர், ரூ.187-ஐச் செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்விக்கி, ஐஸ்கிரீமை அவருக்கு டெலிவரி செய்யவில்லை.

அதாவது, ஐஸ்கிரீம் கடையில் இருந்து ஐஸ்கிரீமை வாங்கிய டெலிவரி ஏஜெண்ட், அதை அந்தப் பெண்ணுக்கு டெலிவரி செய்யவில்லை. ஆனால் ஸ்விக்கி ஆப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்டேட்டஸ் போடப்பட்டிருந்தது. இதுபற்றி ஸ்விக்கி நிறுவனத்திடம் அந்தப் பெண் கேட்டபோது ஐஸ்கிரீமுக்கான பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதையும் படிக்க: இந்தூர்| வேட்பு மனுவை திரும்பப் பெற்ற காங். வேட்பாளர்.. பாஜகவுக்குள் உடனே ஐக்கியமாக இதுதான் காரணம்!

இதையடுத்து அந்தப் பெண், பெங்களூரு அர்பன் இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷனில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின்போது, ”தான் ஓர் இடைத்தரகர் என்றும் தனது டெலிவரி ஏஜெண்ட் செய்த தவறுக்கு நிறுவனம் பொறுப்பாகாது” என்றும் ஸ்விக்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்விக்கியின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், “தங்களுடைய சேவையில் குறைபாடு இருக்கிறது. இது, தவறான வணிக நடைமுறை. அதனால் பணத்தை அவருக்குத் திரும்பத் தரவேண்டும்” எனக் கூறிய நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.3000 வழக்குச் செலவாக ரூ.2000-மும் சேர்த்து மொத்தம் ரூ.5,000 ஸ்விக்கி தரவேண்டும் என உத்தரவிட்டது.

மேலும் ஐஸ்கிரீமுக்கான ரூ.187-ஐயும் வாடிக்கையாளருக்குத் திரும்பத் தருமாறு கூறியுள்ளது. வாடிக்கையாளர் தனக்கு இழப்பீடாக ரூ.10,000மும் வழக்குச் செலவுக்கு ரூ.7500-ம் தரவேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையும் படிக்க: 2வது முறை| ஐபிஎல் விதியை மீறும் ஹர்திக் பாண்டியா.. தண்டிக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்!