Swiggy, Zomato, தீபிந்தர் கோயல் x page
இந்தியா

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய Swiggy, Zomato! புலம்பலில் Customers.. பில்லியனரான Zomato Owner!

டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ, தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தியுள்ளன.

Prakash J

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய Swiggy, Zomato!

வீடு மற்றும் அலுவலகங்களுக்கே டெலிவரி செய்யப்படும் ஆன்லைன் உணவு, நாளுக்குநாள் வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் இத்துறையில் கால் பதித்து வருவதுடன் போட்டிபோட்டி வியாபாரத்தைப் பெருக்கி வருகின்றன. அந்த வகையில், ஸ்விக்கி (swiggy) மற்றும் சோமேட்டோ (zomato) உள்ளிட்ட நிறுவனங்கள் இத்துறையில் பெரும் சேவையாற்றி வருகின்றன. தற்போது இந்த நிறுவனங்கள் லாபத்தைப் பெருக்கும் நோக்கில் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. ஏற்கெனவே உயர்த்தப்பட்டதே கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போதும் விலை உயர்த்தப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

Swiggy மற்றும் Zomato ஆகியவை மீண்டும் தங்கள் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை (பிளாட்பார்ம் கட்டணம் என்பது ஒரு 3ஆம் தரப்பு நிறுவனத்திடம் இருந்து சேவை பெறும்போது, வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை இணைத்ததற்காக இத்தளம் வசூலிக்கும் கட்டணம்) உயர்த்தியுள்ளன. இந்தக் கட்டணம் நிறுவனத்திற்கு நேரடியாகச் செல்லும், இது செலவுகளைக் கட்டுப்படுத்தவும் வருவாயை அதிகரிக்கவும் உதவும்.

இதையும் படிக்க: வீரமரணம்அடைந்த கேப்டன்|கோரிக்கை வைத்த பெற்றோர்..மவுனம் காக்கும் மனைவி..பங்கு பிரிக்கப்பட்டது எப்படி?

ஒருநாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி வரை கூடுதல் வருவாய்

இதன் காரணமாக, இனி இந்த இரண்டு நிறுவன வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.6 செலுத்த வேண்டும். இது முந்தைய கட்டணமான 5 ரூபாயை ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகமாகும். இத்தகைய பிளாட்ஃபார்ம் கட்டணத்தை முதல்முறையாக Swiggy, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அதேவருடம் ஆகஸ்ட் மாதம் Zomato அறிமுகம் செய்தது. அதிலிருந்து, இரு நிறுவனங்களும் மாறிமாறி கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.

1 ரூபாய் கட்டணம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத காரணத்தால், நிறுவனங்கள் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.1 அதிகரிப்பு வாடிக்கையாளர்களுக்கு பெரிதாகத் தோன்றாவிட்டாலும், Zomato ஒருநாளைக்கு சுமார் 22-25 லட்சம் ஆர்டர்களை டெலிவரி செய்கிறது. இதன்மூலம், ஒவ்வொரு நாளும் கூடுதலாக ரூ.25 லட்சம் வருமானத்தை எளிதாக பெற முடியும். மொத்தத்தில், உணவு டெலிவரி நிறுவனங்கள் அனைத்தும் இக்கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் ஒருநாளைக்கு ரூ.1.25 முதல் ரூ.1.5 கோடி வரை கூடுதல் வருவாயை பெற முடியும்.

இதையும் படிக்க: IAS போலிச் சான்றிதழ் விவகாரம்| புனே பெண் அதிகாரியைத் தொடர்ந்து மேலும் பலர் மீது குவியும் புகார்கள்!

கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள் புலம்பல்!

டெல்லி, பெங்களூருவில் அமலுக்கு வந்துள்ள இந்த கட்டண உயர்வு, விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், வெளிப்படையாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகப்படுத்தவும் அதிகரிக்கப்பட்ட இந்தப் பயன்பாட்டுக் கட்டணம், உணவு விநியோகம் செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விலையேற்றம் காரணமாக ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ போன்றவற்றில் உணவுகளை ஆர்டர் செய்வது குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து Capitalmind CEO தீபக் ஷெனாய், “நான், வாரத்திற்கு 12 முறை மதிய மற்றும் இரவு உணவை ஆர்டர் செய்தேன். இப்போது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைக்கு மேல் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதில்லை. நாம் நேரடியாக, பல உணவகங்களில் ஆர்டர் செய்வதால் அவைகள் குறைந்த விலையை நமக்கு வழங்குகின்றன. இது பெரிய அளவில் வித்தியாசம் தருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சந்தை மதிப்பால் இந்தியாவின் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்த Zomato நிறுவனர்!

இது ஒருபுறமிருக்க மறுபுறம், இன்று Zomatoவின் சந்தை மதிப்பு ரூ.2 டிரில்லியனைத் தாண்டியது. வர்த்தக நேர முடிவில் Zomatoவின் சந்தை மதிப்பு ரூ.202,226 கோடியாக இருந்தது. இதையடுத்து Zomatoவின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான தீபிந்தர் கோயல் இந்தியாவின் பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தார். இதன்மூலம் தீபிந்தர் கோயலின் சொத்து மதிப்பு ரூ. 8,000 கோடியை கடந்துள்ளது.

இதனால் தனது 41 வயதில் இந்தியாவின் பணக்கார தொழில்முறை மேலாளராக தீபிந்தர் கோயல் மாறி உள்ளார். ஜொமேட்டோ நிறுவனத்தில் 4.24% பங்குககளை அவர் வைத்திருக்கிறார். அவற்றின் மதிப்பு 36.95 கோடி ஆகும். சொமாட்டோவின் பங்கு விலை உயர்வுக்கு அந்நிறுவனத்தின் Blinkit டெலிவரி தளத்தின் வலுவான செயல்திறன்தான் காரணம் என்று கூறப்படுகிறது.