இன்றைய திருமணங்கள் பல இணைய வழிச் சேவையிலேயே நடைபெறுகின்றன. அதற்கு மேட்ரிமோனி தளங்கள் வழிவகுக்கின்றன. பொதுவாக, ஆண் மற்றும் பெண் என இருதரப்பிலும் அவர்களுடைய சுயவிவரங்களைப் பெற்று, பொருத்தமான வரன்களைத் தேடித் தருகின்றன. இதனால், பெண் மற்றும் ஆண்களுக்கு வரன் தேடும் படலம் குறைகிறது.
அதேநேரத்தில், இதன்மூலம் மோசடி சம்பவங்களும் அரங்கேறுகின்றன. போலியான தகவல்கள் மற்றும் புகைப்படங்களைத் தந்து, அவற்றின்மூலம் பணம் பறிக்கும் மேட்ரிமோனிகளும் தற்போது அதிகளவில் வளர்ந்து வருகின்றன. அதுபோன்ற சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மேட்ரிமோனி தளங்களில் ஒன்றான பாரத் மேட்ரிமோனி, பெண் ஒருவரின் அனுமதியின்றி அவருடைய புகைப்படத்தைப் பயன்படுத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனையும் சமூக வலைப்பதிவாளருமான ஸ்வாதி முகுந்த் என்பவருடைய புகைப்படத்தைத்தான் அந்த மேட்ரிமோனி தளம் பயன்படுத்தியுள்ளது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்த திருமணம் மேட்ரிமோனி தளம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதை ஸ்வாதி முகுந்த் மறுத்துள்ளார். தவிர, இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் ’பாரத் மேட்ரிமோனி ஸ்கேம்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்னை மிகவும் திகைக்க வைத்தது என்னவென்றால், இந்த பாரத் மேட்ரிமோனியின் உயரடுக்கு சந்தா சேவையாகும். இந்தச் சேவையின் மூலம் அவர்கள் உண்மையில் மக்களிடம் நிறைய பணம் வசூலிக்கிறார்கள். மேலும் தங்கள் பயனர்கள் சரியான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பதை உறுதிசெய்ய அவர்கள் சுயவிவரங்களைத் திரையிடுவதாகவும் கவனமாகக் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பல்வேறு பயனர்களும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், “நான் அந்த தளத்தின் மூலம் 1.5 லட்சம் செலவழித்துள்ளேன். இது மிகப்பெரிய மோசடி” எனத் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, "அந்த நிறுவனத்தின் மீது வழக்கு போடுங்கள்" என ஆலோசனை தெரிவித்துள்ளார். இன்னொருவரோ, “பெரும்பாலான மேட்ரிமோனியல் தளங்கள் இப்படித்தான் திருமணமானவர்களின் சுயவிவரங்களைப் பயன்படுத்துகின்றன. நான்கூட இதுகுறித்து பல புகார்கள் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.