ஸ்வாதி மாலிவால் ட்விட்டர்
இந்தியா

ஸ்வாதி மாலிவால் தாக்குதல்|FIRல் 8 முறை கன்னத்தில் அறை.. தலைமறைவான PA.. வலைவீசும் போலீஸ்!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

Prakash J

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்திற்குத் தாம் சென்றிருந்ததாகவும், அப்போது இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த தனி உதவியாளரான விபவ் குமார் தன்னை தாக்கியதாகவும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ஸ்வாதி மாலிவால் புகார் அளித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் விபவ் குமார் 8 முறை கன்னத்தில் அறைந்ததாக ஸ்வாதி மாலிவால் எப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளார். மேலும், ”உன்னை கொன்று புதைத்துவிடுவேன்” என விபவ் குமார் மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர். இதனை தொடர்ந்து விபவ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் அவரைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடமான அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் போலீசார் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினர். போலீசாருடன் தடயவியல் அதிகாரிகளும் கெஜ்ரிவால் வீட்டில் ஆய்வு நடத்தினர்.

இதையும் படிக்க: இலவச பேருந்து பயணத் திட்டம்| பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு தமிழக அமைச்சர் பதிலடி!

இந்த விவகாரம், டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்த சம்பவத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் காரணம். கெஜ்ரிவால் தனது கட்சி பெண் எம்.பி. மீதான தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது நம்பமுடியாதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவதுடன், மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”தோனிக்கான விசில் சத்தம் என் காதுகளையே வலிக்க செய்தது” - நேரில் பார்த்த ஆஸி. வீராங்கனை உருக்கம்!