ஆங்கிலேயர்களின் ஆட்சி அதிகாரத்தின் பிடியிலிருந்த நம் இந்தியாவில் மக்களிடையே ஏற்பட்ட புரட்சி விடுதலை போராட்டமாக உருவானது. காந்தியின் வழியில் அகிம்சை முறையில் மக்கள் போராடினர்.
ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பல இயக்கங்களின் ஊடாக ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக சுதந்திர போராட்ட வீரர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
குறிப்பாக சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியடிகள் அந்நிய பொருட்களை நிராகரித்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசி பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்க மக்களை ஊக்குவித்தார்.
அப்படி காந்தியடிகளால் ஊக்குவிக்கப்பட்டவர் தான் ஆந்திராவின் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்தவர் கே.வி.ரத்னம். ஆசாரி தொழில் செய்து வந்துள்ளார்.
1921இல் காந்தியடிகளை கே.வி.ரத்னம் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது முழுவதும் இந்திய பொருட்களாலான பேனா ஒன்றை உருவாக்கும்படி ரத்னத்தை ஊக்குவித்துள்ளார் காந்தி.
அதை சத்திய வாக்காக எடுத்துக் கொண்ட ரத்னம் இந்திய பேனாவை வடிவமைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக அயல் நாடுகளின் பவுண்டைன் பேனாவை லாவகமாக உடைத்து, அது எப்படி அசம்பிள் செய்யப்பட்டுள்ளன என்பதை விரிவாக ஆராய்ந்துள்ளார்.
பின்னர் அயலகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேனாவின் மூலப்பொருட்களை கொண்டு 1932இல் பவுண்டைன் பேனாவை வடிவமைத்து காந்தியடிகளின் பார்வைக்கு அனுப்பியுள்ளார்.
‘இது சுதேசி தயாரிப்பல்ல’ என நிராகரித்துள்ளார் காந்தி. பின்னர் ஓராண்டு இரவு பகல் பார்க்காமல் உழைத்த ரத்னம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பேனாவை வடிவமைத்து காந்தியடிகளுக்கு அனுப்பியுள்ளார்.
ரத்னத்தின் முயற்சிகளை பாராட்டிய காந்தியடிகள் ‘அன்புள்ள ரத்னம்… நான் உங்களது பவுண்டைன் பேனாவைப் பயன்படுத்தினேன். பஜாரில் கிடைக்கும் அயலக பேனாவுக்கு நல்ல மாற்றாக உங்களது பேனா தெரிகிறது’ என வாழ்த்து கடிதமும் அனுப்பியிருந்தார்.
அதனையடுத்து பலரும் ரத்னத்தின் கைவண்ணத்தில் உருவான சுதேசி பேனாவை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். பல சுதந்திர போரட்ட வீரர்கள் அவர்களது அனுபவங்களை எழுத்து வடிவில் பகிர சுதேசி பேனாவையே பயன்படுத்தி உள்ளனர்.
காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும் தங்களது கைவினை பேனா வடிவமைப்பில் பின்பற்றி வருகின்றனர் ரத்னத்தின் வாரிசுகள்.
தங்கம், வெள்ளி, ஸ்டீல் என வெவ்வேறு உலோகங்களை பயன்படுத்தி ரத்னம் பவுண்டைன் பேனா தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மன் நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு நினைவு பரிசாக பிரதமர் மோடி ரத்னம் பேனாவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.