இந்தியா

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மர்ம கப்பல்கள்...தீவிரவாதிகள் நடமாட்டமா என விசாரணை

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மர்ம கப்பல்கள்...தீவிரவாதிகள் நடமாட்டமா என விசாரணை

webteam

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள குஜராத் கடற்பகுதியில் கடந்த 20 நாட்களில் 2 மர்ம கப்பல்களின் நடமாட்டத்தை கடற்படை உறுதி செய்துள்ளது. 

சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமாகியுள்ள நிலையில், எல்லைகள் கண்காணிப்புப் பணியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் எல்லையான குஜராத் கடல்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை ஹெலிகாப்டர் ஜூலை 10ல் மர்ம கப்பல் ஒன்று குஜராத் கடல் எல்லையை ஒட்டிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டறிந்தது. இதையடுத்து இந்திய கடற்படை கப்பலான சமுத்ர பிரஹாரி அந்தக் கப்பலைச் சுற்றிவளைத்து. அந்த கப்பலில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அல் போம் மரீஸி என்று பெயர் கொண்ட அந்த கப்பலில் இருந்தவர்களில் 3 பேர் ஏமனையும், 2 பேர் தான்சானியாவையும், ஒருவர் சோமாலியாவையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. ஏமன் துறைமுகத்திலிருந்து அவர்கள் புறப்பட்டதாகவும், கப்பல் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தத்தளித்ததாகவும் தெரிந்தது. மேலும், அந்த கப்பலை குஜராத்தின் போர்ப்பந்தர் துறைமுகத்துக்கு இழுத்துச் சென்று முழுமையாக சோதனையிடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல, கடற்படையின் எச்சரிக்கையையும் மீறி கட்ச் வளைகுடா பகுதியில் நுழைந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தோ (Dhow) எனும் கப்பலையும் கடற்படையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். சர்க்கரை, சிமெண்ட் மற்றும் அரிசி ஆகியவற்றை ஏற்றிவந்த அந்த சரக்குக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்தில் இருந்து மே 21ல் புறப்பட்டதாகவும், ஏமனின் முக்காலா துறைமுகத்துக்குச் செல்ல இருந்தாகவும் தெரியவந்துள்ளது. 
ஆனால், மோசமான வானிலை காரணமாக இந்திய கடல்பரப்பில் தஞ்சமடைந்ததாக கப்பலில் இருந்தவர்கள் கூறியதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த கப்பலில் இருந்த 11 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அந்த கப்பல் முந்த்ரா துறைமுகத்துக்கு இழுவை கப்பல் மூலமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 
கடற்படை அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்த மேற்கூறிய 2 கப்பல்களிலும் செயற்கைக்கோள் மூலம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் அதிநவீன துராயா போன்கள் (Thuraya satellite phone) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த துராயா செயற்கைக்கோள் போன்கள் தீவிரவாதிகள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்துவது என்பதால், இந்த விவகாரத்தில் தீவிரவாத தொடர்பு இருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.