இந்தியா

அரசு வீட்டை காலி செய்த சுஷ்மா சுவராஜ் - ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்

அரசு வீட்டை காலி செய்த சுஷ்மா சுவராஜ் - ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள்

webteam

முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் தனக்கு வழங்கப்பட்ட அரசு வீட்டை விட்டு வெளியேறினார். 

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது, வெளிநாடுகளில் பல்வேறு சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை. இதையடுத்து வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட அரசு வீட்டை விட்டு சுஷ்மா சுவராஜ் வெளியேறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “8, சப்தர்ஜூங் லேன், புதுடில்லி என்ற அரசு வீட்டை காலி செய்துவிட்டேன். இந்த முகவரி மற்றும் அங்கிருந்த தொலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ள முடியாது”. எனக்கூறியுள்ளார்.

இதற்கு ட்விட்டரில் பின் தொடருபவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அரசு வீடுகளில் இருந்து வெளியேற வேண்டியவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்வதற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். 

நாட்டின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பெண் அரசியல்வாதி சுஷ்மா சுவராஜ் என மற்றொருவர் புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பெண் அரசியல்வாதி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று வேறு ஒருவர் ட்விட்டரில் கமெண்ட் செய்துள்ளார்.