இந்தியா

கொரோனாவால் வந்த வினை.. டெல்லி பெண்களை பீடித்த மதுப்பழக்கம்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

கொரோனாவால் வந்த வினை.. டெல்லி பெண்களை பீடித்த மதுப்பழக்கம்.. ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

JananiGovindhan

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் மக்கள் பலருக்கும் அவர்களது பழக்க வழக்கங்களில் முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள். அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் அதிகபடியான மனச்சோர்வு ஏற்பட்டதன் விளைவாக குடிப்பழக்கம் இல்லாத பெண்கள் கூட மதுக் குடிக்கத் தொடங்கியிருப்பதாக தரவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, இந்தியாவின் தலைநகராக இருக்கும் டெல்லியில் 37 சதவிகித பெண்களுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், இது கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வறிக்கை மூலம் வெளிவந்திருக்கிறது. 45 சதவிகித பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில், ஸ்ட்ரெஸ் காரணமாக மதுப்பழக்கம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

Community against Drunken Driving (CADD)- நடத்திய ஆய்வில், முழு ஊரடங்கு, அதிகரிக்கப்பட்ட மது விற்பனை, வாழ்வியல் மாற்றம் போன்ற காரணிகள் மதுப் பழக்கத்துக்கு காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. 5000 பேரில் 37.6 சதவிகிதம் பெண்கள் தங்களது மதுப்பழக்கம் இருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்.

இதுபோக, சலிப்புத்தன்மை காரணமாக 30.1 சதவிகித பெண்கள் குடிப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், அடுத்த ஐந்தாண்டுகளில் பெண்களின் மதுபான சந்தை 25 சதவீதம் அதிகரிக்கும் என இந்திய அரசின் மது ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆல்கஹால் சந்தையின் மவுசு, படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள் ஓய்வெடுப்பதற்கும் வெகுமதி பெறுவதற்கும் மது அருந்துவதே சிறந்த வழி என்று தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதும், ஏற்கனவே உள்ள காரணங்களைத் தவிர வசதியான சில்லறை அனுபவங்கள் அனைத்தும் பெண்களிடையே மது அருந்துவதை அதிகரிக்கின்றன எனவும் சாலை பாதுகாப்பு நிபுணர் பிரின்ஸ் சிங்கால் கூறியிருக்கிறார்.