suresh gopi pt web
இந்தியா

"மத்திய அமைச்சர் பதவி வேண்டாமா? நான் எப்ப சொன்னேன்?” - அந்தர் பல்டி அடித்த சுரேஷ் கோபி!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், நடிகர் சுரேஷ் கோபி அமைச்சர் பதவியிலிருந்து விலக நினைக்கும் விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.

PT WEB

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். பிரதமருடன் மோடியுடன் சேர்த்து மொத்தம் 72 பேரில், 61 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 11 பேர் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்ற 36 பேர்களில் சுரேஷ் கோபியும் ஒருவர்.

பிரபல மலையாள நடிகரான சுரேஷ் கோபி கேரளாவில் திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இதையடுத்து அவர் மத்திய இணை அமைச்சராக நேற்று பதவியேற்றார். இந்நிலையில், கேரளாவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் திரைப்படங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் இதனால் மத்திய அமைச்சராக பதவி வகிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து கொண்டே மக்களுக்கு சேவை செய்யவே தான் விரும்புவதாகவும் சுரேஷ் கோபி விளக்கினார். அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு பாஜக தலைமையை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தன் கோரிக்கை ஏற்கப்படும் என நம்புவதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.

சுரேஷ் கோபியின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பியது. நேற்று பதவியேற்ற நிலையில், இன்று பதவி வகிக்க விரும்பவில்லை என தெரிவித்தது பேசுபொருளானது. முன்னதாக அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கே விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் பிரதமர் மோடி தொலைபேசியின் மூலமாக அழைப்பு விடுத்தபின்பே டெல்லி வந்ததாகவும் தகவல்கள் வந்தன. இருந்தபோதும் சினிமாத்துறையில் பல்வேறு பணிகள் நிலுவையில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பணிகளையும் நிறைவேற்ற வேண்டும். எனவே அமைச்சர் பணிக்கு முழுவதுமாக நேரத்தை செலவிடமுடியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில்தான், பதவி விலகுவதாக வந்த செய்திகள் தவறானவை என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

“பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் இருந்து பதவி விலகுவதாக நான் கூறவில்லை. பதவி விலகுவதாக சில ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் முற்றிலும் தவறானவை. கேரள மாநில பிரதிநிதியாக மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறேன்" என சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என திருச்சூரில் வெற்றி பெற்ற போதிருந்தே சுரேஷ் கோபி கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.