இந்தியா

இட ஒதுக்கீட்டை ரத்துச்செய்யக்கோரி மனு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த எச்சரிக்கை

இட ஒதுக்கீட்டை ரத்துச்செய்யக்கோரி மனு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த எச்சரிக்கை

webteam

இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை திரும்ப பெறவில்லை என்றால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

சட்ட மாணவரான சிவானி பண்வார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இட ஒதுக்கீடு முறை பாகுபாட்டை ஊக்குவிப்பதுடன் ஜாதிய கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்ட மாணவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு என்பது விளம்பரத்திற்கானதாக இருக்கிறதே அன்றி வேறு எதற்காகவும் இருப்பதாக தங்களுக்கு தோன்றவில்லை.

எனவே இந்த மனுவை திரும்ப பெறவில்லை என்றால் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து இந்த மனுவை திரும்பப்பெறுவதாக மனுதாரர் அறிவித்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.