மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், நடிகை நவ்நீத் கவுர் ராணா இந்த முறை பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற நடிகை நவ்நீத், கடந்த மார்ச் 27ஆம் தேதி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அதே அமராவதி (தனி) தொகுதியில் பாஜக சார்பில் நவ்நீத் மீண்டும் போட்டியிட உள்ளார்.
நவ்நீத், பாஜக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜக துணையுடன் ஆட்சியில் ஏக்நாத் ஷிண்டே கட்சியின் ஆதரவாளரும் முன்னாள் எம்பியுமான ஆனந்தராவ் அட்சுல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க மறுபுறம், இவர்மீது போலி ஆவணங்களை தாக்கல் செய்து பட்டியல் வகுப்பினருக்கான சாதிச் சான்றிதழை பெற்றதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நவ்நீத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தது. அத்துடன் அந்தச் சாதிச் சான்றிதழையும் ரத்து செய்தது. மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து நவ்நீத் ராணா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் இதுகுறித்த இறுதி விசாரணையை கடந்த பிப்ரவரி மாதத்துடன் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (ஏப்ரல் 4) அறிவிக்கப்பட்டது. நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நவநீத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “நவநீத் ராணாவின் சாதிச் சான்றிதழில் எந்தக் குறையும் இல்லை. ஆய்வுக் குழுவின் முடிவு சரியானது. அதை ஏற்றுக்கொள்ளலாம். நவ்நீத் ராணாவின் சாதிச் சான்றிதழ் விவகாரம் தொடர்பான ஆய்வுக் குழுவின் அறிக்கையில் மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது” என உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமக்குச் சாதமாக வந்ததைத் தொடர்ந்து நவ்நீத் ராணா உற்சாகத்தில் உள்ளார். இதுகுறித்து அவர், ”நான் பல ஆண்டுகளாக என் தொகுதி மக்களுக்காக உழைத்து வருகிறேன். எனக்கும் எனது தொகுதிக்கும் இது ஒரு பெரிய நாள். தேசத்தின் நலனுக்காக அமராவதி வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இதுவே முதல் முறை. என்னைவிட எனது தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இவர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கன்னட திரைப்படமான ’தர்ஷன்’ மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், ’சீனு வசந்தி லட்சுமி’, ’சேத்னா’, ’ஜெகபதி’, குட் பாய், ’பூமா’ போன்ற படங்களில் நடித்தார். கரீனா கபூர் நடித்த ஹிந்தி படமான ’சமேலி’யின் ரீமேக்கான ’ஜபிலம்மா’ என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். மேலும் அவர் மம்முட்டி, ஜூனியர் என்டிஆர் மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா போன்ற பிரபலமான நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழில், ’அரசாங்கம்’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ படங்களில் நடித்திருந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு, ரவி ராணாவை திருமணம் செய்ததன்மூலம் அரசியலில் கால்பதித்தார். ரவி ராணா பாஜக ஆதரவாளர். அவரும் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். 2014 ஆம் ஆண்டு அமராவதி தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். பின்னர், 2019இல் சுயேட்சையாக களமிறங்கி சிவசேனாவின் ஆனந்த்ராவ் அட்சுலை 36,951 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.