அசாம் ஒப்பந்தம் முகநூல்
இந்தியா

அசாம் ஒப்பந்தம் | குடியுரிமைச் சட்டத்தின் 6-ஏ பிரிவு செல்லும்.. உச்சநீதிமன்றம் சொன்னதன் முழு விவரம்!

அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் குடியரிமைச் சட்டத்தின் 6 ஏ பிரிவு அரசமைப்பு ரீதியாக செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: ராஜீவ்

ஜனவரி 1966 மற்றும் மார்ச் 1971 க்கு இடையில் வங்காளதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லுபடியாகுமா என்ற வழக்கில், “குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு 6A செல்லும்” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார், பிற 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தீர்ப்பு விவரம்:

இது குறித்தான தீர்ப்பில்..

“மார்ச் 25, 1971 க்கு முன்பு (பாகிஸ்தானிலிருந்து பிரிந்து இன்றைய வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்று ஆன தினம்) வங்காளதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்கு வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வழிவகுக்கும் பிரிவு 6A சரியானது. அந்த கட்ஆஃப் தேதியை வரையறுத்தது சரியானதே. பதிவு செய்வது என்பது இந்தியாவில் தானாகவே குடியுரிமை பெறமுடியும் என்ற நடைமுறை அல்ல (registration is not the de-facto model to confer citizenship in india ).

பிரிவு 6A என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கருத முடியாது. ஏனெனில் அது பதிவு செய்வதற்கான செயல்முறையை பரிந்துரைக்கவில்லை. எனவே, பிரிவு 6A செல்லுபடியாகும். அசாம் மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட தனித்துவமான பிரச்னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வாக இந்த சட்ட பிரிவு அமைந்துள்ளது.

ஒருவர் தங்கள் அண்டை வீட்டாராக யார் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதை அனுமதிக்க முடியாது. ஏனெனில், அது அரசியலமைப்பின் சகோதரத்துவ கொள்கைக்கு எதிரானது. ’வாழு, வாழ விடு’ என்பதே நம் கொள்கையாகும் (live and let live).

புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் குடிமக்களானவுடன் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டனர். நம் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், 1985ம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 6A சட்ட பிரிவு, ஒரு அரசியல் தீர்வு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில், குடியுரிமைச் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது, அதன் வரலாறு என்ன, நோக்கம் என்ன என்பது பற்றியெல்லாம் விரிவாக அறியலாம்....

குடியுரிமைச் சட்டத்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டது?

  • குடியுரிமைச் சட்டம் 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில், ‘1948 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்ந்த எந்தவொரு நபருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்’ என்று அரசியலமைப்பின் 6 வது பிரிவு வழியாக கூறப்படுகிறது. இந்நிலையில், அசாம் ஒப்பந்தத்தின் முன்னேற்றமாக 1985 டிசம்பரில் பிரிவு 6A என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

அசாம் ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?

அசாம் ஒப்பந்தம் என்பது ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்பு ஒப்பந்தமாகும். இது அசாமிய கலாச்சாரம், பாரம்பரியம், மொழியியல் மற்றும் சமூக அடையாளத்தைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட ஒப்பந்தமாகும்.

முன்னதாக அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை நாடு கடத்த அனைத்து அசாம் மாணவர் சங்கம் நடத்திய ஆறு ஆண்டுகால போராட்டத்தின் முடிவில் இந்த அசாம் ஒப்பந்தம் வந்தது.

கிளர்ந்தெழுந்த குழுக்கள், அமலுக்கு வந்த அசாம் ஒப்பந்தம்...

அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் அனைத்து அசாம் கன சங்க்ராம் பரிஷத் ஆகியவை பங்களாதேஷிலிருந்து வந்து அசாமில் குடியேறியவர்களின் வருகைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த குழுக்கள்.

மார்ச் 26, 1971-ல் மேற்கு பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம் பிரிந்தது. இதை சுட்டிக்காட்டி மார்ச் 25, 1971-க்கு பிறகு வெளிநாட்டில் இருந்து அசாமில் நுழைந்து குடியேறியவர்களை கண்டறிந்து வெளியேற்ற குடியுரிமைச் சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. அதாவது கிழக்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சட்டத்துக்குப் புறம்பாக / ஆவணங்களின்றி வந்தவர்களை வெளியேற்றும் வகையில் புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டது.

வங்கதேச கொடி

வழக்கு விவரம்:

இருப்பினும், பிரிவு 6A ஜனவரி 1, 1966 க்கு முன் வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் நுழைந்த அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கியது. அதேநேரம், ஜனவரி 1, 1966-ல் இருந்து மார்ச் 24, 1971 க்கு இடையில் அசாமில் நுழைந்து குடியேறியவர்கள் 10 ஆண்டுகளுக்கு வாக்களிக்கும் சலுகைகள் இல்லாமல் இந்திய குடிமக்களாக கருதப்பட்டனர்.

இந்த விதிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது..

அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரிவு 6A அசாமில், வெகுஜன குடியேற்றத்தை எளிதாக்கியது என்று மனுதாரர்கள் வாதிட்டனர். மேலும் “மார்ச் 1971 கட்-ஆஃப் தேதிக்கு முன்னர் அசாமில் நுழைந்ததாக கூறும் புலம்பெயர்ந்தோருக்கு உடனடி குடியுரிமை வழங்கப்படுவதால் அசாமின் மக்கள் தொகை கணிசமாக மாறிவிட்டது” என்று அவர்கள் கூறினர்.

மனுதாரர்களின் வாதம்...

இவர்களுடன் இணைந்து அசாம் பொதுப்பணித் தலைவர், அசாம் சன்மிலிதா மகாசங்கம் மற்றும் பலர் உள்ளிட்ட மனுதாரர்கள், “அசாமில் குடியேறியவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளோ ஜனவரி 1, 1966 க்கு முன்னர் குடியேறினார்களா என்பதைச் சரிபார்க்க எந்த சரிபார்ப்பு முறைகளும் இல்லை.

உடனடி குடியுரிமை வழங்கியது, வெகுஜன குடியேற்றத்தை ஊக்குவித்து அசாமின் மக்கள்தொகையை மாற்றியது. அசாமில் உள்ள பழங்குடி மக்கள் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் வளங்களை இழந்துள்ளனர். அசாமின் மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை உள்ளடக்கி உள்ளனர்.

இதற்கு நேர்மாறாக, வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் அண்டை மாநிலங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறைவாகவே உள்ளனர். உதாரணத்துக்கு மேற்கு வங்கம் (7%), மேகாலயா (1%) மற்றும் திரிபுரா (10%). இதன் மூலம் அசாம் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளானது” என்று வாதிட்டனர்.

உச்சநீதிமன்றம்

மத்திய அரசு வாதம்...

விசாரணையின் போது வாதிட்ட மத்திய அரசு, “குடியுரிமையை வழங்குவது அல்லது மறுப்பது தொடர்பான குறிப்பிட்ட சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான அதிகாரம் நாடாமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளைக் கருத்தில் கொண்டு பிரிவு 6A இயற்றப்பட்டது” என்றது.

பிற பிரதிவாதிகளின் வாதம்...

இந்நிலையில், மனுதாரர்களுக்கு எதிராக வாதிட்ட பிற பிரதிவாதிகள், “1800 களில் இருந்து அசாமின் மக்கள் தொகை மாறிக்கொண்டே இருக்கிறது. பிரிவு 6A இயற்றப்படுவதற்கு முன்பிருந்தே அசாம் பல மொழிகள் மற்றும் பல கலாசாரங்களைக் கொண்டுள்ளது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான இடம்பெயர்வு போன்ற பிற காரணிகளாலும் அசாமின் மக்கள் தொகை அளவு மாறக்கூடும். பிரிவு 6A செல்லுபடியாகாது என்ற பட்சத்தில் பல நபர்கள் குடியுரிமையை இழந்து நாடற்றவர்களாகிவிடுவார்கள்.

வங்கதேசமும் அவர்களை வெளிநாட்டினராகக் கருதுகிறது. எனவே அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் கைவிடப்படுவார்கள். வங்கதேசப் பிரதமர் 1971 மார்ச் 25 க்குப் பிறகு குடியேறியவர்களை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது” என்று வாதிட்டனர்.

தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்த விசாரணை யாவும் கடந்த காலங்களில் நடந்துகொண்டிருந்த போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிரிவு 6A இந்தியாவுக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே ஒரு "சுவாரஸ்யமான புரிதல்" என்று சுட்டிக்காட்டினார். இந்த ஏற்பாடு, மார்ச் 25, 1971 க்கு முன் வந்த மக்களை "நாடற்றவர்களாக" விட்டுவிடுவதற்கு பதிலாக குடியுரிமை வழங்குவதன் மூலம் "பிரதான நீரோட்டத்திற்கு" கொண்டு வர அனுமதித்தது என்று தெரிவித்திருந்ததோடு வழக்கின் தீர்வை ஒத்திவைத்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு...

ஒத்திவைக்கப்பட்ட அந்த தீர்ப்புதான், நேற்று வழங்கப்பட்டுள்ளது அதில் “குடியுரிமைச் சட்டம், 1955-ன் பிரிவு 6A செல்லும். 1985ம் ஆண்டு அசாம் ஒப்பந்தத்தை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 6A சட்ட பிரிவு, ஒரு அரசியல் தீர்வு” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.