இந்தியா

பக்ரீத்துக்காக கேரளாவில் தளர்வுகள் - உச்சநீதிமன்றம் அதிருப்தி

Sinekadhara

பக்ரீத் பண்டிகைக்காக தளர்வுகள் வழங்கிய கேரள அரசின் முடிவிற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கேரள அரசு, கொரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து பதிலளிக்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக நீதிபதி ரோஹிங்டன் நரிமன் தெரிவித்தார்.

தளர்வுகள் அளிக்குமாறு கடை உரிமையாளர்கள் சார்பாக அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது என்று கூறிய நீதிபதி, மத அல்லது வேறு எந்த குழுக்களும் மக்களின் விலைமதிப்பற்ற உயிருடனும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள பிரிவு 21 மற்றும் 14 கீழ் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலும் தலையிட முடியாது என்றார். கன்வர் யாத்திரை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்களை பக்ரீத் பண்டிகைக்கும் கேரளா பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.