370 வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ஆம் தேதி வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா, உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 370 வது சட்டப்பிரிவை நீக்கியது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் அனுராதா பாசினும் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசியலமைப்புச் சட்டம் 14, 19, 21 ஆகிய பிரிவுகள் வழங்கும், கருத்துரிமை உள்ளிட்டவற்றை மறுக்கும் வகையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு மனுக்களும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் பாப்டே, அப்துல் நசீர் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகின்றன.