Supreme Court  PT (file picture)
இந்தியா

குட்கா விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தது.

Snehatara

கடந்த 2006ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்பட்டு வந்தது. இந்த உத்தரவை மீறும் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.

அதே நேரத்தில் இந்த தடை உத்தரவுக்கு எதிராக குட்கா, பான் மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வது தான் உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் பணியே தவிர அதில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோகப்படுத்துவது, முறைபடுத்துவது உள்ளிட்டவை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Gukta

எனவே இந்த சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு முழு தடைவிதிக்க எந்த வழிவகையும் இல்லை. அவசர நிலை கருதி தற்காலிகமாக மட்டுமே தடைசெய்ய முடியுமே தவிர நிரந்தரத் தடை விதிக்க முடியாது. எனவே உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகார வரம்பை மீறி இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளார். எனவே குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீக்கம் செய்யப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது குட்கா பான்மசாலா போன்றவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அரசுகள் மேற்கொண்டுவரும் விழிப்புணர்வுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் தடையாக மாறிவிடும். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு அந்த மனுவில் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

நாட்டிலுள்ள ஐந்து உயர்நீதிமன்றங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், இத்தகைய ஒட்டுமொத்த தடை உத்தரவை பிறப்பித்தபோது அதை சரியானது அல்ல என கூறியிருக்கிறார்கள். புகையிலைப் பொருட்கள் வெறும் மெல்லும் பொருட்கள் மட்டும் தான். அவை விழுங்கப்படுவதில்லை என்பதால் அவற்றை உணவுப் பொருட்களாக கருதக்கூடாது. தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குட்கா பொருட்களை தடை செய்திருக்கிறது. இது மத்திய அரசுக்கு மட்டுமே உள்ள அதிகாரம் என புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடுமையான சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இவற்றின் அடிப்படையில் தான் தமிழ்நாட்டில் சுகாதார கண்ணோட்டத்துடன் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டது. வர்த்தக நோக்கில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு நாங்கள் அதற்கு தடை விதித்திருக்கிறோம். அரசுகள் சிலர் தனி நபர்களுடைய லாபத்திற்காக பொதுமக்களின் சுகாதாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது.

High Court | TN Govt

புகையிலைப் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்காக செலவுசெய்வதும், அதற்காக அரசுகள் செலவு செய்வதும், அதனால் ஏற்படக்கூடிய நேர விரையம், பொருளாதார இழப்பு உள்ளிட்டவை எல்லாம் மிகப்பெரியது. புகையிலைப் பொருட்கள் கூட உணவுப்பொருட்களாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறதா என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இத்தகைய புகையிலைப் பொருட்கள் ஏதாவது உணவுப்பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புகைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் முடிவு சரியானது தான் என்றும், எனவே தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், பாதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்கள் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட அமைப்புகளை நாடி தங்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.