இந்தியா

“பொன். மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா?” - உச்சநீதிமன்றம் பதில்

“பொன். மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா?” - உச்சநீதிமன்றம் பதில்

webteam

பொன். மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா ? என்பதை நாங்கள் பார்க்க போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சிலைக் கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க தடை விதித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தும், ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் பதில் மனுவை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிட்டார். 

அப்போது, “சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம்  நியமித்தது அதன் அதிகார வரம்புக்கு மீறியது. 

குறிப்பிட்ட துறைக்கான விசாரணை அதிகாரியை நியமிப்பது தமிழக அரசின் உரிமை. அதை பறிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கினை மேற்பார்வையிட வேண்டுமானால் அதிகாரியையோ, அல்லது வேறு யாரையோ நியமிக்கலாம். ஆனால் விசாரணை அதிகாரியை நியமிக்க முடியாது. 

சாரா பாய் என்ற 95 வயது பெண்மணி மீது பொன். மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த சாரா பாய் குஜராத்தை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரர். அவர் சொந்தமாக அருங்காட்சியகம் வைத்துள்ளார். அதிலுள்ள சிலைகள் கடத்தப்பட்டது எனக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளார். இப்படி சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் என்பதால்தான் பொன்.மாணிக்கவேலை எதிர்க்கிறோம். 

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்பதால் சென்னை உயர்நீதிமன்றமும் இவரது தவறுகளை கண்டுகொள்வதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து பொன். மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா ? என்பதை நாங்கள் பார்க்க போவதில்லை எனவும் அவரின் நியமனம் சரியா? தவறா? என்பதை மட்டுமே பார்க்க போகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.