இந்தியா

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க சிறப்பு குழு - உச்ச நீதிமன்றம்

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க சிறப்பு குழு - உச்ச நீதிமன்றம்

Sinekadhara

நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கவும், மருந்து கையிருப்பு உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்கவும் 12 பேர் கொண்ட சிறப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், தமிழகம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கில் சில முக்கியமான உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அதனை வழங்குவது, மருந்து கையிருப்பு ஆகியவற்றை கவனிக்க 12 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனை தலைவர் தேவேந்தர் சிங் ராணா, வேலூர் மருத்துவமனை பேராசிரியர் ககந்தீப், அதன் இயக்குநர் பீட்டர், கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என நாடு முழுவதும் உள்ள முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர். நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர், சாலை போக்குவரத்து துறையின் செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களில் செயலாளர் அளவில் இருக்கும் அதிகாரிகளிடம் இருந்து தேவையான உதவிகளை சிறப்புக் குழு பெற்றுக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்புக் குழு அறிவியல் பூர்வமாகவும், மத்திய அரசு விதிமுறைகளின்படியும் ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் ஆக்சிஜன் விநியோக அளவை உறுதிப்படுத்தும். தேவை ஏற்படின் துணை குழுக்களை உருவாக்கிக் கொள்ளவும் சிறப்புக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்காக வெளியிலிருந்தும் தேவையான உதவிகளை சிறப்புக் குழு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளும், சுகாதார அமைப்புகளும் இந்த சிறப்பு குழுவை உதவிக்காக அணுகலாம் என தெரிவித்திருக்கும் உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகள் அனைத்து தகவல்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.