மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அதற்கு வலு சேர்ப்பது போல, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சையத் சுஜா என்ற தொழில்நுட்ப நிபுணர், இந்த இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என்றும் தன்னிடம் சில கட்சிகள் முறைகேட்டில் ஈடுபடுமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பரபரப்பானது.
இந்தச் சூழலில் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதுகுறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டம் நடைபெற்றது. அதில், உலகில் ஓரிரு நாடுகளில் மட்டுமே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதாகவும், மற்ற நாடுகள் வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பி விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மென்பொருட்கள் மூலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை முறைகேடாக பயன்படுத்த முடியும் என பொதுநல வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு முன் வந்தது. அப்போது இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டார்.