உச்சநீதிமன்றம், திருப்பதி லட்டு pt web
இந்தியா

திருப்பதி லட்டு விவகாரம் | “மீண்டும் இது அரசியல் நாடகமாக மாறுவதை விரும்பவில்லை” - உச்சநீதிமன்றம்

PT WEB

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார்களை விசாரிக்க புதிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் மீண்டும் மீண்டும் அரசியல் நாடகமாக மாறுவதை தாங்கள் விரும்பவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி லட்டு

ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜகவின் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி பி ஆர் கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விரிவாக விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தற்பொழுது எழுந்திருக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் உணர்வுகள் சார்ந்தது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் உணவு பாதுகாப்பு சார்ந்ததாகவும் உள்ளது என்றார்.

தற்பொழுது உள்ள சிறப்பு புலனாய்வு குழு உறுப்பினர்கள் பற்றிய எதிர்மறையான கருத்துகள் எதுவும் இல்லை எனவும், சில மூத்த மத்திய அரசு அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்றால், மக்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கை ஏற்படும் என்றார்.

#JUSTIN | திருப்பதி லட்டு - புதிய விசாரணைக் குழு

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் தொடர்ந்து அரசியல் செய்து வருவதாகவும், சுதந்திரமான விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை அடுத்து உத்தரவுகளை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிபிஐ இயக்குனர் பரிந்துரைக்கக்கூடிய இரண்டு அதிகாரிகள், ஆந்திர பிரதேச காவல்துறையிலிருந்து இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இந்த விவகாரத்தை விசாரிக்கட்டும் என்றனர். இந்த விவகாரம் அரசியல் நாடகமாக மீண்டும் மீண்டும் மாறுவதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.