இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில் இருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசியலிஸ்ட் (Secularism & Socialism) என்ற வார்த்தைகளை நீக்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, “மதச்சார்பின்மை என்பது இந்தியாவின் அங்கம் என இதே நீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், “சோசலிசம் என்ற பதத்திற்கு நீங்களாக ஒரு அர்த்தத்தை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். சோசியலிசம் என்றால் நாட்டின் அனைத்து வளங்களும் அனைத்து வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் பங்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். இதனை மேற்கத்திய முறையில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. மதச்சார்பின்மை என்பது, இந்திய அரசமைப்பின் முக்கியமான அடிப்படையான விஷயம். அரசமைப்பின் திருத்த முடியாத பகுதி அது” என நீதிபதிகள் அறிவுறுத்தல் கொடுத்தனர்.
இருப்பினும் மனுதாரர்கள் சார்பில், “இந்த இரண்டு வார்த்தைகளையும் (மதச்சார்பின்மை மற்றும் சோசியலிஸம்) அரசியல் சாசனத்தின் முகப்பில் சேர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தையும் அது மேற்கொள்ளப்பட்ட தேதியையும் சற்று விரிவாக பார்க்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் அரசியல் சாசனம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் பார்வையையும் நாம் விரிவாக கவனிக்க வேண்டியது இருக்கிறது” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.