இந்தியா

அயோத்தி பிரச்னை: பேசி தீர்க்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்

அயோத்தி பிரச்னை: பேசி தீர்க்க வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்

webteam

பாபர் மசூதி ராமர் கோவில் விவகாரத்தை சம்மந்தப்பட்டவர்களே பேசி தீர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று மனுதாரர்களில் ஒருவரான, பாஜக எம்பி சுப்பிரமணியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி ஜேஎஸ் கேஹர் தலைமையிலான அமர்வு, பாபர் மசூதி, ராமர் கோயில் கட்டும் விவகாரம் மக்களின் உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் நீதி‌மன்றத்திற்கு வெளியே பேசி தீர்ப்பதே சரியானதாக இருக்கும் என தெரிவித்தது. இவ்விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி தீர்வு காண முன்‌வந்தால் ‌மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார். மீண்டும் மார்ச் 31ஆம் தேதி இந்த விவகாரத்தை கவனப்படுத்தும் படி மனுதாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தை வரவேற்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. நீதிபதிகள் கருத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த எதிர்த்தரப்பினர் முன் வருவார்கள் என நம்புவதாக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஆனால் அயோத்தி பிரச்னைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்றும் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் பாபர் மசூதி நடவடிக்கை குழு கருத்து தெரிவித்துள்ளது. இப்பிரச்னைக்கு நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என பாபர் மசூதி நடவடிக்கை குழுவின் அமைப்பாளர் ஜபர்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்.