இந்தியா

ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு!

ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் முன் ஆஜராக உத்தரவு!

webteam

கர்நாடகவில் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த 10 எம்.எல்.ஏக்களும் சபாநாயகர் முன் இன்று ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகா அரசில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள், கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் நாகராஜும், ஜிக்மள்ளாபூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுதாகரும், சட்டப்பேரவைக்கு வந்து தங்களது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினர். இதன் மூலம் ராஜினாமா கடிதம் அளித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் தவிர 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் அரசுக்கான ஆதரவை ஏற்கனவே வாபஸ் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 10 பேர், கர்நாடகா சபாநாயகர் வேண்டுமென்றே தங்கள் ராஜினாமாவை ஏற்க மறுப்பதாகக் குற்றம்சாட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை இன்று அவசர வழக் காக விசாரிப்பதாக, உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகர் முன்பு இன்று மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்றும் இன்றே சபாநாயகர் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எம்.எல்.ஏக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கர்நாடக டிஜிபிக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தது.