இந்தியா

சபரிமலை தீர்ப்புக்கு 'இடைக்கால தடை இல்லை' - உச்சநீதிமன்றம்

சபரிமலை தீர்ப்புக்கு 'இடைக்கால தடை இல்லை' - உச்சநீதிமன்றம்

webteam

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபட அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் தொடக்கத்தில் பெண்கள் சிலர் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோது வருகை தந்தனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆயிக்கணக்கானோர் சபரிமலையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அவற்றின் மீது ஜனவரி 22ஆம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் நேற்று கூறியது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு வரும் வரை, சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்குமாறு வழக்கறிஞர் மாத்தீவ்ஸ் நெடும்பாரா கோரிக்கை விடுத்தார்.

அதற்கு சீராய்வு மனுக்களை அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22ஆம் தேதி விசாரிக்கும் வரை காத்திருக்கும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறினார். மேலும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.