சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த பெண்களை ஏன் அனுமதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்க மறுப்பது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தீபக்மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வயதை காரணம் காட்டி பெண்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி மறுப்பது ஒருவகையான தீண்டாமை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர் பேசிய நீதிபதிகள், இவ்வாறு தான் வழிபட வேண்டும், குறிப்பிட்ட மதத்தை தான் பின்பற்ற வேண்டும் என அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடவில்லை எனக் கூறினர். அப்படி இருக்கும் போது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக அமைந்துவிடாதா? எனவும் கேள்வி எழுப்பினர். இறைவழிபாட்டில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.