யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையின்போது, ‘பதஞ்சலி’ நிறுவனம் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கி வருகிறது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணையின்போது, மன்னிப்பு குறித்து செய்தித்தாள்களில் மிகக் குறுகிய அளவில் விளம்பரம் வெளியிட்டிருந்ததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெரிய அளிவிலும் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனமும் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி, 67 தேசிய செய்தித்தாள்களில் மீண்டும் பொதுமன்னிப்பு கோரி விளம்பரம் செய்திருப்பதாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது, தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக பத்திரிகைகளில் மன்னிப்பு கோரி வெளியிட்ட விளம்பரங்களைச் சரிபார்த்த நீதிபதிகள், “தடை செய்யப்பட்ட பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டதா” என்று கேள்வி எழுப்பினர். மேலும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் கையிறுப்பு அகற்றப்பட்டுவிட்டதா உள்ளிட்டவை குறித்து 3 வாரங்களில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்புத் தேதியைக் குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பதஞ்சலி வழக்கு விசாரணை தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஆர்.வி. அசோகன் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தொடர்பான விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான அசோகன், நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினார். ஆனால், அவரது மன்னிப்பை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதையும் படிக்க: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு| குற்றப்பத்திரிகையில் ஆம் ஆத்மியை இணைக்கும் ED!