சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், மகாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப்பிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் நவாப் மாலிக் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
நவாப் மாலிக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், 1999-ம் ஆண்டு நடந்ததாக சொல்லப்படக்கூடிய இந்த விவகாரத்தில், இத்தனை ஆண்டுகள் கழித்து அவரை கைது செய்திருப்பதாகவும், இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு என்றும், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என வாதிட்டார். இந்த வழக்கு தற்போது ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் இப்போதைக்கு ஜாமீன் வழங்குவது சரியாக இருக்காது எனக் கூறி அவரது மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். வேண்டுமென்றால் வழக்கமான கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி நவாப் மாலிக் மனுதாக்கல் செய்யலாம் எனவும் அறிவுறுத்தினர்.