இந்தியா

துர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

துர்கா பூஜைக்கு அரசுப் பணம் - மேற்குவங்க அரசுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

rajakannan

துர்கா பூஜைக்கு அரசுப் பணம் செலவிடுவது தொடர்பான வழக்கில் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசின் அறிவிப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மதசார்பின்மை தன்மைக்கு எதிராகவும், வகுப்புவாத உணர்வுகளை தூண்டுவதற்கு வழிவகுக்கும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பூஜை குழுக்களுக்கு நிதி அறிவித்துள்ள மேற்குவங்க அரசின் முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர். மேலும், இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக மாநில அரசின் முடிவில் தலையிட முடியாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.