புல்டோசர் இடிப்பு, உச்ச நீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

புல்டோசர் நடவடிக்கை: சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்... வரவேற்ற ராகுல் காந்தி!

“நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாசாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Prakash J

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில், ‘புல்டோசர் நடவடிக்கை’ என்கிற பெயரில், குற்றம்செய்பவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் குற்றம் செய்யப்பட்டவர்கள் வீடுகள் மட்டுமன்றி, மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களின் வீடுகளும் இடிக்கப்படுகின்றன.

பாலியல் உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களின் வீடுகளைப் போல, அரசுக்கு எதிராக போராடுவோரின் வீடுகளும் ‘சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது’ என்று சொல்லப்பட்டு புல்டோசர்களால் இடிக்கப்படுகின்றன. உள்ளூர் அதிகாரிகள் நேரடியாக சென்று அவற்றை தரைமட்டம் ஆக்கிவிடுகின்றனர்.

குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்த புல்டோசர் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார், “கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள பட்சத்தில் கிரிமினல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளை இடிக்க முடியும்” என்று வாதாடினார்.

இதையும் படிக்க: ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!

அதற்கு நீதிபதிகள், "குற்ற வழக்கில் தொடா்புடையவா் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இதுதொடா்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வகுக்கும்” என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கருத்தை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், “மனித நேயத்தையும் நீதியையும் புல்டோசரின்கீழ் நசுக்கிய பாஜகவின் அரசியல் சாசனத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது. இந்த மிக முக்கியமான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்றும், பாஜக அரசாங்கங்களின் இந்த ஜனநாயக விரோதப்போக்கில் இருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல. சமீப காலமாக நாட்டில் தொடங்கியுள்ள புல்டோசர் கலாசாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அவதானிப்பு வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை | மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது.. சிபிஐ அதிரடி!