இந்தியா

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சபு ஸ்டீபன் என்பவர் மாட்டிறைச்சி குறித்து தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாட்டிறைச்சி தடை விதிக்கப்பட்ட விதிமுறைகள் குறைத்து சபு ஸ்டீபன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள மக்களவைச் செயலாளர் மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்து ஒப்புதல் பெறவில்லை என விளக்கமளித்திருந்த பதிலை நீதிபதிகள் முன் சமர்ப்பித்தார்.  மேலும் அவர் சட்டப்பிரிவு 38 ஏ பிரிவின்படி சட்டத்தில் திருத்தம் செய்தால் அந்த வரைவை 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதில் மாற்றம் செய்து அமல்படுத்தலாம். இல்லையெனில், அந்த சட்டத்திருத்தம் செல்லாது எனவும் மனுவில் ஸ்டீபன் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஜூலை மாதம் 27ம் தேதி தகவலைப்பெற்றதாக தெரிவித்த அவர், அதில் நாடாளுமன்றத்தில் மாட்டிறைச்சி தடை குறித்த விதிமுறைகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.  

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.ஹேகர், "தற்போது மாட்டிறைச்சி தடை விதிகள் செயல்பாட்டில் உள்ளது. அது அறிவிக்கப்பட்ட சட்டமாகி விட்டது. அரசு இதனை அமல்படுத்த மாட்டோம் என கூறமுடியாது. ஆனால் இந்த சட்டத்தை திரும்பபெறும் வரையிலோ, அல்லது திருத்தப்படும் வரையிலோ இச்சட்டம் இந்த வடிவிலேயே அமலில் இருக்கும். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.