இந்தியா

பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன ? - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

பேரறிவாளன் விடுதலைக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டுக்காக பேரறிவாளன் பேட்டரி வாங்கித் தரவில்லை என விசாரணை அதிகாரி கூறியதன் அடிப்படையில், அந்த பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது குறித்து விசாரணை கோரி, பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உத்தரவிட்டபடி புதிதாக வழக்கு விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் ‌செய்துவிட்டீர்களா என்று சிபிஐ தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு‌, இலங்கை‌ உள்ளிட்ட பல வெளிநாடுகளில் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், இதற்கா‌க அந்நாட்டு அரசுக‌ள் இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் சிபிஐ வழக்கறிஞர் கூறினார். மிகப்பெரிய வெளியுறவுக் கொள்கைகள் இருந்தும் அனுமதி கூட பெற முடியவில்லையா என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிபிஐ புதிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை அளிக்கும் என நம்பி‌‌க்கை இல்லை என்று கூறினர்.

அப்போது‌, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலைக்காக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரைத்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேரறிவாளனின் வழக்கறிஞர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சிபிஐ வழக்கறிஞர்‌, விடுதலை குறித்து ஆளுநருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க தேவையில்லை என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதி நாகேஸ்வரராவ், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என தங்களுக்கு தெரியும் என்றதோடு, பேரறிவாளன் விடுதலைக்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.