வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, நாள்தோறும் பல்வேறு புதிய தகவல்கள் வந்தபடி உள்ளன. இதனிடையே வழக்கின் தீவிரத்தை உணர்ந்து உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிக அளவில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கொல்கத்தா காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுதான் அந்தப் பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா? சம்பந்தப்பட்ட மருத்துவமனை முழுமையாக அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு உள்ளது. ஆனால் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய மாநில அரசாங்கம், அதை செய்ய தவறிவிட்டது. அதை ஏன் என்பதை தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?
மருத்துவர்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் இரவுபகலாக வேலை செய்கிறார்கள். ஆனால், இவை தொடர்கதையாகவே இருந்து வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை. கடந்த மே மாதம்கூட, இதே மேற்குவங்க மாநிலத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள் தாக்கப்பட்டு சிலர் உயிரிழந்திருக்கிறார்கள். பீகாரில் செவிலியர் ஒருவர் தாக்கப்பட்டு இருக்கிறார். ஹைதராபாத்திலும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
இவை எல்லாம் அரசு ரீதியிலான தோல்விக்கான அறிகுறியாகவே நாங்கள் பார்க்கிறோம். வேரூன்றிப்போய் உள்ள ஆணாதிக்க மனநிலை காரணமாக நோயாளிகளின் உறவினர்கள், பெண் மருத்துவர்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
மேலும், பெண் மருத்துவர்கள் பாலியல்ரீதியிலான வன்கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள். இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் அமைப்புரீதியாகவே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததை காட்டுகிறது. இவற்றையெல்லாம் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்காக நாடு காத்திருக்க முடியாது.
மருத்துவர்களைப் பாதுகாக்க மாநில அளவில் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக இல்லை. இரவுநேரங்களில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு ஓய்வு அறைகள் இல்லை.
பல இடங்களில் மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணிநேர பணிகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்குக்கூடச் சுகாதாரமான சூழல் இல்லை” எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ”இந்த விவகாரத்தில் சிபிஐ விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேசியப் பணி குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9 மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகள் ஆகியோர் கொண்ட தேசிய பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அறுவை சிகிச்சை நிபுணர், வைஸ் அட்மிரல் ஆர்சரின் டாக்டர் டிநாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், பேராசிரியை அனிதா சக்சேனா, ஹெட் கார்டியாலஜி, எய்ம்ஸ் டெல்லி பேராசிரியர் பல்லவி சப்ரே, டீன் கிராண்ட் மருத்துவக் கல்லூரி மும்பை டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா, நரம்பியல் துறை, எய்ம்ஸ் ஆகியோர் குழுவில் உள்ளனர். இவர்களுடன் மத்திய அரசின் அமைச்சரவைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், சுகாதாரத் துறையின் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழுவின் தலைவர் ஆகியோரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
”அவசர அறை பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தடுப்பதற்கு தேவையான அமைப்புகளை உருவாக்குவது, தேவையற்ற நபர்கள் மருத்துவமனைகளுக்குள் நுழைவதைத் தடுப்பது, அதிக அளவு கூட்டம் கூடும்போது அதை நிர்வகிப்பதற்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்குவது, பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகாரம் பதிவு செய்வதற்கான அமைப்புகளை நிர்வாகிப்பது, மருத்துவர்கள் ஓய்வு அறைகள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு எடுப்பதற்கான அறைகளை உருவாக்குவது,
மருத்துவத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை போக்குவரத்து ஏற்பாடு செய்து தருவது, அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, நெருக்கடியான சூழலை கையாள்வதற்கான பயிற்சிகளை தருவது, நிறுவனரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு காலண்டிற்கும் சமர்ப்பிப்பது, அடிதடி போன்ற சூழல் ஏற்படும்பட்சத்தில் போலீஸ் உதவியை விரைவாக கூறுவது, மருத்து தொழிலில் ஈடுபடுபவர்கள் அவசர தேவைக்காக இலவச தொலைத்தொடர்பு எண்களை உருவாக்குவது போன்ற பல்வேறு அம்சங்களை இந்த குழு நிர்வகிக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.