காட்டுப் பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் மக்களை வெளியேற்ற மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வன உரிமைகள் சட்டம் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அரசு ஆண்டாண்டு காலமாக ஆதிவாசிகள் மற்றும் மக்கள் வசித்து வரும் வனப்பகுதிகளை அவர்களிடம் திரும்பி ஒப்படைப்பதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த சட்டத்தில் காட்டில் வசிக்கும் மக்கள் தங்களின் தேவைகளுக்காக காட்டு வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பகுதிகளிலுள்ள கிராமசபை குழு காட்டுப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தால் அடிக்கடி வனத்துறை அதிகாரிகளுக்கும் காட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பிரச்சனைகள் ஏற்பட்டுவந்தது.
இந்நிலையில், வன உரிமைகள் சட்டத்தின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவிதா சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி கொண்ட அமர்வு விசாரித்தது. அவர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதில் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் உரிமை ரத்தான மக்கள் உடனடியாக காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
அதன்படி அந்தந்த மாநில அரசுகள் வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதிக்குள் இந்த மக்களை காட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அத்துடன் மாநில அரசுகள் இந்த உத்தரவை செயல்முறைப் படுத்தியது தொடர்பான அறிக்கையையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் 16 மாநிலங்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்குமுன் கடந்த 2002-2004 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.