அனில் அம்பானி ட்விட்டர்
இந்தியா

”மெட்ரோவிடம் பெற்ற ரூ.3,300 கோடியை திருப்பிக் கொடுங்கள்”-அனில் அம்பானிக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்

’டெல்லி மெட்ரோவிடம் இருந்து பெற்ற ரூ.3,300 கோடியை உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்’ என அனில் அம்பானி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Prakash J

ஆசிய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானியின் சகோதரரும் மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் இளைய மகனுமான அனில் அம்பானி, கடந்த 2008ஆம் ஆண்டு உலகின் ஆறாவது பணக்காரர் என அறியப்பட்டார். ஆனால் அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், அவருடைய வணிக நிறுவனங்கள் பின்னடவைச் சந்தித்ததால் பில்லியனர் பட்டியலில் இருந்தும் வெளியேறினார். தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்துவரும் அவருடைய வணிகத்துக்கு மத்தியில் மற்றுமொரு அடி விழுந்துள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் துணை நிறுவனமான DAMEPL, கடந்த 2008ஆம் ஆண்டு, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருந்தது. ”மெட்ரோ கட்டுமானப் பணிகள் ரூ.8,000 கோடியை மெட்ரோ நிறுவனம் வழங்க வேண்டும்” என DAMEPL நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

இந்த வழக்கில், DAMEPL நிறுவனத்திற்கு டெல்லி மெட்ரோ ரூ.8,000 கோடி வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வகையில், டெல்லி மெட்ரோ நிறுவனமும் கிட்டத்தட்ட 3,300 கோடி ரூபாய் வரை DAMEPL நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. அதேநேரத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து மெட்ரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது அனில் அம்பானிக்கு ஆதரவாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

அத்துடன், ’டெல்லி மெட்ரோவிடம் இருந்து பெற்ற ரூ.3,300 கோடியையும் உடனே திருப்பிச் செலுத்த வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான கடனில் மூழ்கி உள்ளதால் இந்த தொகையை அந்த நிறுவனம் செலுத்த இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க: வணிகத்தில் மோசடி: பாண்டியா சகோதரர்கள் கொடுத்த புகாரில் மற்றொரு சகோதரர் வைபவ் பாண்டியா அதிரடி கைது!