இந்தியா

’வேட்பாளராகவே இல்லாத ஒருவரது வழக்கால் எனது பணி பாதிக்கப்படுகிறது’ - கனிமொழி எம்.பி

’வேட்பாளராகவே இல்லாத ஒருவரது வழக்கால் எனது பணி பாதிக்கப்படுகிறது’ - கனிமொழி எம்.பி

webteam

மக்களவை உறுப்பினர் கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில், எதிர் மனுதாரர்கள் பதில் மனுவும், மனுதாரர் விளக்க மனுவும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்தது.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அவர் தொகுதியைச் சேர்ந்த சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதால் வழக்கில் இறுதி விசாரணைக்கு பட்டியலிட கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தலைமை நீதிபதி உத்தரவிட்ட நிலையில் இன்றைய தினம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த விவகாரத்தில் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் தான் மனுதாரர் எனவும், அவரே கனிமொழியின் வெற்றியை எதிர்த்து மனுதாக்கல் செய்து உள்ளார் எனவும் கூறியபோது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தவர் வேட்பாளர் இல்லையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு இல்லை என கூறிய மூத்த வழக்கறிஞர் வில்சன், இந்த வழக்கில் கூறும் குற்றச்சாட்டு என்பது கனிமொழியின் கணவரின் "பான் கார்டு" நம்பர் சேர்க்கப்படவில்லை என்பது தான். கனிமொழியின் கணவர் வெளிநாடு வாழ் இந்தியர் என்பதால் அதன் விவரத்தை கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அவசியம் இல்லை, மேலும் வெளிநாட்டு வாழ் பிரஜையான தனது கணவரிடம் பான் கார்டு இல்லாத நிலையில் அதனை எவ்வாறு தாக்கல் செய்ய முடியும்? ஒரு வெற்றிகரமான வேட்பாளராக கனிமொழி இருந்திருக்கிறார். மேலும் தேர்தலில் சுமார் 5.25 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார் எனவும் வில்சன் வாதத்தை முன் வைத்தார்.

வேட்பாளரே இல்லாத ஒருவர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கால் தனது பணிதான் பாதிக்கப்படுகிறது. எனவே தனக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். எதிர்மனுதாரர் சந்தானகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இவ்வழக்கு என்பது உச்சநீதிமன்றத்தால் வகுத்துள்ள நெறிமுறைப்படி தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அப்போது நீதிபதிகள் இவ்வழக்கை அக்டோபர் மாதம் விசாரிக்கலாம் எனக் கூறி வழக்கை ஒத்தி வைப்பதாகவும், அதற்குள் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத அனைத்து எதிர் தரப்பினரும் பதில் மனுவை தாக்கல்செய்ய வேண்டும் எனவும், அதேபோல் பதில் மனுவுக்கான விளக்கமனுவை மனுதாரர் கனிமொழி தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.