ரயில் தாமதமானதால் விமானத்தை தவறவிட்ட நபருக்கு இழப்பீடாக ரூ.30,000-த்தை செலுத்த ரயில்வே நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2016ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் சுக்லா என்ற நபர் தனது குடும்பத்துடன் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் செல்ல மதியம் 12 மணி விமானத்தில் பதிவு செய்திருக்கிறார். விமான நிலையம் செல்ல ரயிலில் பயணிக்கவேண்டி இருந்ததால் காலை 8.10 மணி ரயிலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் காலை 8.10 மணிக்கு வரவேண்டிய ரயில் கிட்டத்தட்ட 4 மணிநேர தாமதத்திற்குபிறகு மதியம் 12 மணியளவில் வந்திருக்கிறது. இதனால் விமானத்தை தவறவிட்ட சுக்லா, ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு செல்ல டாக்சிக்கு ரூ.15 ஆயிரமும், ஸ்ரீநகரில் தங்கியதற்கு ரூ.10 ஆயிரமும் செலவிட்டிருக்கிறார். இதனால் இவர் உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் ரயில் தாமதத்திற்கான முறையான காரணத்தை தெரிவிக்காவிடில், ஒரு பயணி நுகர்வோர் மன்றத்தின் முன் சேவை குறைபாடு குறித்த புகாரை முன்வைக்கும் பட்சத்தில், அதற்கு ரயில்வே நிர்வாகம் இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என எம்.ஆர். ஷா மற்றும் அனிருத்தா போஸ் நீதிமன்ற அமர்வு தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டிருக்கிறது.
மேலும், பயணிகளின் நேரத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு ரயில் தாமதமாகும்போது அதன் பொறுப்பை ஏதேனும் ஒரு தரப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் தற்போது தனியார் போட்டியாளர்கள் மத்தியில் அரசு போக்குவரத்து தாக்கு பிடிக்க வேண்டுமென்றால் அதன் கட்டமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையே, இந்திய சட்டப்பிரிவு 114 மற்றும் 115இன் கீழ் ரயில் தாமதமானால் அதற்கு ரயில்வே நிர்வாகம் எந்தவித இழப்பீடும் வழங்கத் தேவையில்லை என சிறப்பு வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இழப்பீடு தொகையை 9 சதவீத வட்டியுடன் ரூ.30,000ஆக செலுத்த உச்சநீதிமன்றம் உத்தவிட்டிருக்கிறது.