ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், 3 வாரங்களுக்குள் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலை சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏன்? ஆலை தொடர்ந்து இயங்கக்கூடாது என ஆலை நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு அனுமதியளித்த பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவு தொடரும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. அதேசமயம் உடனே இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள நிபந்தனைகளின் கீழ்தான் ஆலையை செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று மாபெரும் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. இதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைத்து மூடியது. இருப்பினும் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை. இதனால் பசுமைத் தீர்ப்பாயத்தை ஸ்டெர்லைட் நிர்வாகம் நாடியது குறிப்பிடத்தக்கது.