அயோத்தியில் வழிபாட்டுத் தலம் தொடர்பான சர்ச்சைக்கு சுமூகத் தீர்வு காண மத்தியஸ்தரை நியமிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனால், மத்தியஸ்தத்திற்கு தயார் என இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகள் யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மத்தியஸ்தத்திற்கு உத்தரவிடுவது குறித்த தீர்ப்பை அறிவிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக இவ்வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், அயோத்தி பிரச்னையில் சமரசம் மூலம் தீர்வு காண ஒரு சதவிகித வாய்ப்பு இருந்தாலும் அதற்கு முயற்சித்து பார்த்துவிட வேண்டும் என தெரிவித்திருந்தனர். மக்களவைத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருட்களில் ஒன்றாக அயோத்தி பிரச்னை பேசப்பட வாய்ப்புள்ளதால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை 3 பிரிவாகப் பிரித்து பயன்படுத்திக் கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.