உச்சநீதிமன்றம் முகநூல்
இந்தியா

“குழந்தை திருமண தடை சட்ட செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்க முடியாது” உச்சநீதிமன்றம்

குழந்தை திருமண தடை சட்டத்தின் செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PT WEB

குழந்தை திருமண தடை சட்டத்தின் செயல்பாட்டுக்கு தனிநபர் சட்டங்கள் தடையாக இருக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை திருமண சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தனிநபர் சட்டங்களை காட்டி நடத்தப்படும் குழந்தை திருமணங்கள், தனது வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் உரிமையை அந்த சிறாருக்கு மறுப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் குழந்தை திருமணங்களை தடுப்பதிலும், சிறார்களை காப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், தண்டனை வாங்கித் தருவதில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடாது என தெரிவித்துள்ளது.

குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு அதிகாரம் பெற்ற அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருமணங்கள் அதிகம் நடைபெறும் முகூர்த்த நாட்களின் போது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம்

குழந்தை திருமண தடுப்பு சட்டம் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் படி மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது. காவல்துறையினருக்கு குழந்தை திருமண தடுப்பு சட்டம் குறித்து பயிற்சி அளிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தின் அபாயம் குறித்தும் பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவை போதிப்பதற்கான சாத்தியம் குறித்தும் ஆய்வு செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.