கர்நாடக உயர்நீதிமன்றம், நீதிபதி ஸ்ரீஷானந்தா, உச்சநீதிமன்றம் pt web
இந்தியா

“நீதிபதிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது” - உச்சநீதிமன்றம்

Angeshwar G

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும்பகுதி பாகிஸ்தான்?

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வாடகை கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை நீதிபதி வேதவியாச ஸ்ரீஷானந்தா விசாரித்தார். இதில் குத்தகை ஒப்பந்தம் மற்றும் நில உரிமையாளர்களின் அதிகாரங்கள் தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார். இதில், வாடகைக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்களில் தேவைப்படும் சில திருத்தங்கள் தொடர்பாகவும் விவாதம் நடைபெற்றது.

நீதிபதி ஸ்ரீஷானந்தா

இந்த விசாரணையின்போதுதான், பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று அவர் குறிப்பிட்டார். அவர் பாகிஸ்தான் என குறிப்பிட்ட அந்த பகுதி பெங்களூரு நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கோரி பல்யா எனும் பகுதியாகும். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பெண் வழக்கறிஞரிடமும் சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்த வீடியோ க்ளிப்பும் வெளியானது.

விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்றம்

விசாரணையின் போது நீதிபதி பேசுகையில், “மைசூர் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு சென்று பாருங்கள். ஒவ்வொரு ஆட்டோ ரிக்‌ஷாவிலும் 10 பயணிகள் இருப்பார்கள். கோரி பல்யாவில் இருந்து மார்கெட்டுக்கு செல்லும் அந்த மேம்பாலம் இந்தியாவில் இல்லை, அது பாகிஸ்தானில் இருக்கிறது. இதுதான் யதார்த்தம். நீங்கள் எவ்வளவு கண்டிப்பான காவல்துறை அதிகாரியை அங்கு நிறுத்தினாலும் அவர்கள் அங்கு தாக்கப்படுவார்கள்” என தெரிவித்திருந்தார். நீதிபதியின் இந்த கருத்து வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். அரசியலமைப்பு பொறுப்பில் இருக்கும் ஒருவரால் எப்படி இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்திரா ஜெய்சிங், கபில் சிபில் போன்ற பல மூத்த வழக்கறிஞர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இதில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தில் உதவவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களை கேட்டு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை

உச்சநீதிமன்றம்

அதுமட்டுமின்றி, "நீதித்துறையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேரலை செய்யும்போது, சமூக ஊடகங்களில் மக்கள் அதை உன்னிப்பாக கவனிக்கின்றனர். எனவே நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கும் கருத்துக்கள், பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது. எனவே, இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது" என்ற அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, “நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது” என்றும் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு, அடுத்த புதன்கிழமைக்கு (செப் 25) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.