இந்தியா

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

அயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

webteam

அயோத்தி வி‌வகாரத்தி‌ல் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தை விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் மத்தியஸ்தர்கள் குழு வழங்கியுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் அயோத்தி‌ வழக்கில் மீண்டு‌ம் விசாரணை‌ தேவையா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது

அயோத்தியில் குறிப்பிட்ட பகுதியை இந்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வந்தன. இதன் தொடர்ச்சிய‌க 1992ம் ஆண்டு அயோத்தியி்ல் வலதுசாரி அமைப்புகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்குகளில் அலகா‌பாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரித்து ராம் லல்லா, நி‌ர்மோகி அக்காரா, சன்னி வக்ஃப் வாரியம் ஆகிய 3 அமைப்புகளுக்கு வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இவ்வ‌ழக்கில் முதலில் சமரசமாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்தது. சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் பேசி முடிவு காண 3 பேர் கொண்ட குழுவையும் கடந்த மார்ச் 8ஆம் தேதி உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது

உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர்‌, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு கடந்த 5 மாதங்களாக சம்பந்தப்பட்ட தரப்புகள் மத்தியில் சமரசப் பேச்சுகள் நடத்தி வந்தது. இப்பேச்சுவார்த்தை விவரங்கள், எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்திடம் நேற்று வழங்கியது.‌ இந்த அறிக்கை அடிப்படையில் அயோத்தி‌ வழக்கில் மீண்டு‌ம் விசாரணை‌ தேவையா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது