டி.ஒய்.சந்திரசூட் எக்ஸ் தளம்
இந்தியா

’உங்களை நான் காயப்படுத்தியிருந்தால்’- உருக்கமான பேச்சுடன் சந்திரசூட் ஓய்வு.. இறுதிநாளிலும் தீர்ப்பு!

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட்டின் இன்றுடன் ஓய்வுபெற்றார்.

Prakash J

ஓய்வு நாளிலும் மகத்தான தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்து வந்த டி.ஒய்.சந்திரசூட்டின் இன்றுடன் ஓய்வுபெற்றார். இவருடைய பதவிக்காலம் நாளை மறுநாளுடன் (நவ.10) முடிவடைய உள்ளது. அவரது பணி ஓய்வு 10ஆம் தேதி என்றாலும், 9 மற்றும் 10ஆம் தேதி நீதிமன்றத்துக்கு விடுமுறை (சனி, ஞாயிறு) என்பதால், இன்றே ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரியாவிடை அளித்தனர். அவர், இன்று தன்னுடைய கடைசிப் பணி நாளிலும் சிறப்பானதொரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியலமைப்பு பெஞ்ச் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து குறித்த முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமானது மத்திய பல்கலைக்கழகமாக இருப்பதால், அதை சிறுபான்மை நிறுவனமாக கருத முடியாது என்று 1967-இல் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரத்தை புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்தது.

இந்தியாவில் நீதித்துறை சார்ந்து அதிகம் எதிரொலித்த பெயர்களில் ஒன்று, டி.ஒய்.சந்திரசூட். காரணம், அவர் தன்னுடைய பணிக்காலத்தில் மதிப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவே ஒருசில தீர்ப்புகளை வழங்கியுள்ளார். தனது 8 ஆண்டுக்கால உச்ச நீதிமன்ற பதவி காலத்தில் சுமார் 600 தீர்ப்புகளை தனியாக எழுதியுள்ளார். இதை தவிர ஆயிரத்து 200க்கும் அதிகமான உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் அங்கம் வகித்திருக்கிறார். தற்போது உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் அதிக எண்ணிக்கையில் தீர்ப்புகளை எழுதியது இவர்தான். இவர் எழுதிய தீர்ப்புகளில் சுமார் 68 தீர்ப்புகள் அரசியல் சாசனத்துடன் நேரடியாக தொடர்புகொண்டது. அவர் வழங்கிய முக்கியமான தீர்ப்புகளை இங்கே பார்க்கலாம்.

இதையும் படிக்க: செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு|எலான் மஸ்க்கிற்கு மத்தியஅரசு கிரீன்சிக்னல்.. அம்பானிக்கு சிக்கல்!

டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகள்

1. இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அதாவது கடந்த பிப்ரவரியில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 2018 முதல் நடைமுறையில் இருந்த அரசியல் நிதியுதவிக்கான தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்தது. இந்தத் திட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது என சந்திரசூட் கூறினார்.

2. இந்த மாத தொடக்கத்தில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, பொது நலனுக்காகவே இருந்தாலும் அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது என தீர்ப்பு வழங்கியது.

3. 2023 டிசம்பரில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஜம்மு -காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியதை உறுதி செய்தது.

4. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அக்டோபர் 2023இல், ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது. சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமணங்களைத் தவிர, திருமணத்திற்கு தகுதியற்ற உரிமை இல்லை என்று கூறியது.

5. 1971ஆம் ஆண்டுக்கு முன் வந்த வங்கதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அஸ்ஸாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதியின் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையும் படிக்க: ட்ரம்ப்-க்கு வாழ்த்து தெரிவித்த புதின்| முடிவுக்கு வருமா உக்ரைன் போர்.. கடந்தகால அரசியல் சொல்வதென்ன?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம்

6. இந்த மாத தொடக்கத்தில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, உத்தரப்பிரதேசத்தில் மதரஸாக்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தும் 2004 சட்டத்தின் செல்லுபடியை உறுதிசெய்தது.

7. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர் சர்ச்சைக்கு மத்தியில், மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டி.ஒய்.சந்திரசூட்

8. கடந்த மார்ச் மாதம், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச், ஒரு எம்பி அல்லது எம்எல்ஏ வாக்களிப்பதற்காகவோ அல்லது சட்டமன்றத்தில் பேசுவதற்காகவோ லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டால், அவர்கள் வழக்கிலிருந்து விடுபட முடியாது என தீர்ப்பளித்தது.

9. அக்டோபரில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006-ஐ திறம்பட செயல்படுத்துவதற்கு பல வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

10. கடந்த 2023 மே மாதம் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், டெல்லியில் துணை நிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் என்ற தீர்ப்பை வழங்கியது.

இதையும் படிக்க: சட்டம்-ஒழுங்கு விவகாரம்|சந்திரபாபுவிடம் பேச தைரியமிருக்கா? பவன் கல்யாணைச் சாடிய ஜெகன் மோகன் ரெட்டி!

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த காலத்திலும் பல்வேறு தீர்ப்புகள்

இதுதவிர, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தகாலத்திலும் அவர் பல மகத்தான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத அடிப்படையில் வாக்குகளை சேகரிக்க கூடாது என தீர்ப்பு வழங்கியது. அதே ஆண்டு ஆதார் தொடர்பான வழக்கை விசாரித்தபோது தனிநபர் ரகசியம் என்பதும் அடிப்படை உரிமைதான் என ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு ஆகிவற்றில் அங்கம் வகித்துள்ளார்.

சந்திரசூட்

அடுத்து, 2018இல் தன்பாலின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று இந்தியத் தண்டனை சட்டத்தின் 377வது பிரிவு சந்திரசூட் அடங்கிய அமர்வில் ரத்து செய்யப்பட்டது. ஆணோ பெண்ணோ தங்களுக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பதில் அரசோ பெற்றோரோ தலையிட முடியாது என்று தீர்ப்பு கூறியது. தொடர்ந்து அதே ஆண்டில் திருமணத்தை மீறிய உறவு குற்றம் கிடையாது என்று தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து அதே ஆண்டில் 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லக்கூடாது என்ற தடை ரத்து செய்யப்பட்டது. 2019இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: சிகை அலங்காரம் செய்த காதலி.. கோபப்பட்ட காதலன்.. அமெரிக்காவில் அரங்கேறிய கொடூரம்!

பிரியாவிடையின்போது உருக்கமாகப் பேசிய சந்திரசூட்

முன்னதாக பிரியாவிடையின்போது பேசிய நீதிபதிகள், “பொறுமையாக வழக்குகளை விசாரணை மேற்கொண்டுள்ளீர்கள். உச்ச நீதிமன்றத்தில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்தீர்கள். இளம் வழக்கறிஞர்களுக்கு ஊக்கமாக இருந்தீர்கள். உடல்ரீதியாக இனி நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் இல்லை என்றாலும், நீங்கள் விசாரணை மேற்கொண்ட வழக்குகளும், வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளும் காலத்திற்கும் நிலைத்திருக்கும்” என்றனர்.

இதைத் தொடர்ந்து பேசிய சந்திரசூட், “வாழ்க்கையைப் பற்றி நீதிமன்றத்தில் நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். இந்த நீதிமன்றம்தான் தொடர்ந்து என்னை இயக்கிக்கொண்டிருந்தது. முந்தைய வழக்கைபோல புதிய வழக்கு ஒன்று வருவதில்லை, ஒவ்வொன்றும் புதியதாகவே இருக்கும். உங்கள் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தாலோ, பாதித்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் நான் எதையும் உள்நோக்கத்தோடு செய்யவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி. நாளை முதல் நான் தீர்ப்பளிக்கமுடியாது. ஆனால் பணி ஓய்வு நாளில் நிறைவாக உணர்கிறேன்” என உருக்கமாகப் பேசினார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஓய்வுபெற்றதையடுத்து, அந்தப் பதவிக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரைக்கப்பட்டு, அவர் வரும் நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்ற வடகொரிய ராணுவம்.. ஆபாச படம் பார்க்கும் வீரர்கள்!