பி.வி.நாகர்த்னா ட்விட்டர்
இந்தியா

பண மதிப்பிழப்பு: மாறுபட்ட தீர்ப்பு தந்தது ஏன்? விளக்கமளித்த நீதிபதி பி.வி.நாகரத்னா!

Prakash J

பண மதிப்பிழப்பு குறித்து கடுமையாக விமர்சித்த பி.வி.நாகரத்னா

ஐதராபாத்தில் உள்ள தனியார் சட்டப் பல்கலைக்கழகத்தில், கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் நீதிபதி பி.வி.நாகரத்னா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “2016-ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் 86 சதவிகித நோட்டுகள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. 2016-இல் அவசர அவசரமாக செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்குக்கூடத் தெரியாது என்கிறார்கள் சிலர்.

புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 86 சதவிகிதம் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது கண்மூடித்தனமானது. புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 நோட்டுகளில் 98 சதவிகிதம் திரும்ப வந்துவிட்டதால் அதன் பிறகான வருமானவரி நடவடிக்கைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. மேலும் கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற பணமதிப்பிழப்பு, ஒரு நல்ல வழி என்று முன்பு நானும் நினைத்திருந்தேன்; ஆனால் அது செயல்படுத்தப்பட்ட பிறகு அந்த நோக்கம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. பண மதிப்பிழப்பு சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அதுதொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு தந்தேன்” என்றார்.

இதையும் படிக்க: டெல்லி முதல்வர் மனைவியுடன் ஹேமந்த் சோரன் மனைவி சந்திப்பு.. இருவரும் பேசியது என்ன?

’ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்பட வேண்டும்’ - பி.வி.நாகரத்னா

தொடர்ந்து பேசிய அவர், “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாலும், அவர்களின் பிற நடவடிக்கைகளினாலும், உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆளுநர்கள் முக்கிய பேசுபொருளாக இருக்கின்றனர். அரசியலமைப்பின்படி, இது ஆரோக்கியமான போக்கு அல்ல. ஆளுநர் பதவி என்பது முக்கியமான அரசியலமைப்பு பதவியாகும். ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட்டால்தான் இப்படியான வழக்குகள் குறையும்” என விமர்சித்தார்.

முன்னதாக 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.ஏ.நசீர் தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவ்வழக்கின் இறுதி விசாரணை முடிந்து கடந்த ஆண்டு (2023) ஜனவரி 2ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, 5 நீதிபதிகளில் 4:1 என்ற பெரும்பான்மையில் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியே என்று அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து. நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டவிரோதமானது என தீர்ப்பளித்திருந்தார்.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த சிவராஜ் பாட்டீல் மருமகள்.. மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்!

பண மதிப்பிழப்பு: பி.வி.நாகரத்னா தீர்ப்பில் சொன்னது என்ன?

நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், "எனது கண்ணோட்டத்தில் நவம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை சட்டத்திற்கு விரோதமானது. 2016-ஆம் ஆண்டு இருந்த நிலையை இப்போது திரும்பக் கொண்டுவர முடியாது. ஆனாலும், அந்த நடவடிக்கை சட்டத்திற்கு எதிரான அதிகார துஷ்பிரயேகம். அதனால் அது சட்டத்திற்கு விரோதமானது. அந்த நடவடிக்கை செயல்முறைபடுத்தப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது” எனத் தெரிவித்திருந்தார்.

இதேபோல தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட ஆளுநர்கள் மீது தொடர்ந்து அம்மாநில அரசுகளால் புகார் வாசிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட அமைச்சர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தது பேசுபொருளானது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னர், அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஆளுநர்கள் விவகாரம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீதிபதி பி.வி.நாகரத்னா பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: வழக்கறிஞர் மீது பொய்வழக்கு: குஜராத் Ex IPS அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. நீதிமன்றம் அதிரடி!